2635. வன்கண்ணர் தம்மை மதியாதுன் பொன்னடியின்
தண்கண் அடியேன்தன் சஞ்சலவன் நெஞ்சகத்தின்
புன்கண் உழல்வைப் புகல்கின்றேன் காத்திலையேல்
என்கண் அனையாய் எனக்கார் இரங்குவரே.
உரை: என்னுடைய கண் போன்றவனே, வன்கன்மை யுடையவரை நினைக்காமல் உனது பொன்னடிக் கண்ணே யுறையும் அடியவனாகிய யான், துன்பத்தால் வலிதாகிய என் மனத்துயரில் ஆழ்ந்து வருந்துவதை எடுத்துரைத்தேனாக, நீ என்னைக் காத்தருளாயாயின், என்னை நோக்கி இரங்குபவர் உலகில் யாவர் உள்ளனர்? கூறுக. எ.று.
வன்கண்மை யுடையவரை வன்கண்ணரெனக் குறிக்கின்றார். வன்கண்மை - கற்போற் வலிதாம் தன்மை. அவரைச் சார்வதாற் பயனின்மை நோக்கி நீங்கினமை தோன்ற, “வன்கண்ணர் தம்மை மதியாது” என்று கூறுகின்றார். பொன்னடி - அழகிய திருவடி. ஒருவரது அருளாதரவு பெற்று வாழ்பவரை, அடிக்கீழ் உறைபவர், அடியுறை என்பது சான்றோர் வழக்கு. “அளிநசைக்கிரங்கி நின்அடி
நிழற் பழகிய அடியுறை” (புறம். 198) என வருவது காண்க. இக்கருத்தே விளங்க, “பொன்னடியின் தன்கண் அடியேன்” என வுரைக்கின்றார். சஞ்சலம் - துன்பம். இளகும் இயல்பிற்றாகிய நெஞ்சம் துன்பம் சுடச்சுடத் தாக்குதலால் இறுகி வலிதானமை புலப்படச் “சஞ்சல வன்னெஞ்சகம்” எனக் கூறுகின்றார். நெஞ்சம் - நெஞ்சகம் என வந்தது. புன்கண் உழல்வு - துன்பத்திற் கிடந்து வருந்துதல். உழல்வு - உழல்வாயிற்று. புகல் - புகல்வு என வருவது போல; “முனை புகல் புகல்வின் மாறா மைந்தர்” (பதிற். 84) என வருதல் காண்க. யான் உரைப்பதைக் கேட்டுத் துன்பத்தினின்றும் காவா தொழிவாயாயின், என்னைக் காப்பார் பிறர் இல்லையாவதை நினைந்தருள்க என முறையிடுமாறு தோன்ற, “காத்திலையேல் எனக்கார் இரங்குவரே” என விளம்புகிறார். ஒருவரும் இல்லையென்பது குறிப்பெச்சம்.
இதனால், நீ யல்லது என்னைக் காப்பாற்றுவார் ஒருவருமில்லையென முறையிட்டவாறாம். (5)
|