2638.

     துன்றியமா பாதகத்தோன் சூழ்வினையை ஓர்கணத்தில்
     அன்றுதவிர்த் தாண்ட அருட்கடல்நீ என்றடுத்தேன்
     கன்றுறும்என் கண்கலக்கம் கண்டும் இரங்காயேல்
     என்றும்உளாய் மற்றிங் கெவர்தான் இரங்குவரே.

உரை:

      எக்காலத்தும் உள்பொருளாகிய பெருமானே, மிக்கதாகிய மாபாதகம் புரிந்தவனைச் சூழ்ந்து பற்றி யிருந்த பாவத்தை ஒரு கணப் பொழுதில் அந்நாளில் போக்கி யருள் செய்த அருட் கடலாயினாய் நீ என்று நினைந்து நின் திருவருளை வேண்டித் திருவடியை அடைந்தேனாக, செய்த வினையை நினைந்து மனம் நொந்து கண்ணீர் சொரியும் என்னைக் கண்களாற் பார்த்தும் அருள் செய்யாயாயின் உலகில் யாவர் என்பால் இரக்கம் கொள்வார்கள்? ஒருவரும் இல்லை. எ.று.

      என்றும் உளாய், எக்காலத்தவராலும் உள்பொருள் எனப் போற்றப்படுபவனே. “பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருளென்றே பல்லாண்டு கூறுதுமே” (திருப்பல்லாண்டு) எனச் சேந்தனார் செப்புவதறிக. பாதக மெனப்படும் குற்றங்கள் அனைத்தும் கொண்டவன் மாபாதகன். பாதங்கள் அனைத்தினும் தாயைப் பெண்டாளல் முதலியன மாபாதகம் எனச் சொல்லப்படும். அதனைப் புரிந்தவன் என்றற்குத் “துன்றிய மாபாதகத்தோன்” என்று கூறுகிறார். பத்தென்னும் எண்ணினுள் ஒன்று முதல் ஒன்பதற்கு மேலும் துன்றுதல் போல, இந்த மாபாதகம் ஏனைப் பாதகங்களைத் தன்கண் கொண்டிருத்தலால், “துன்றிய மாபாதகன்” என்று சொல்லுகின்றார். சூழ்வினை - தாய்க்கொலை புரிந்த பிரமகத்தி என்னும் தீவினை. அத்தீவினை, தன்னைச் செய்பவன் எத்துணைப் பிறப்பு மாறி மாறி எடுப்பினும் அவன் “உயிரின்கட் கிடந்து புக்குழிப் புகுதலின்” சூழ்வினை எனப்படுகிறது. அதனையும் மதுரைச் சொக்கநாதன் இமைப்பொழுதில் தொடர் பறுத் தொழித்த வரலாறு பற்றி “ஓர்கணத்தில் அன்று தவிர்த்தாண்ட அருட் கடல் நீ” எனப் புகழ்கின்றார். அன்று - மதுரையில் திருவிளையாடல் பல புரிந்த அப்போது. அருட் கடல் - அருளாகிய கடல். கன்றுதல் - ஈண்டு பன்முறையும் நினைந்து வருந்துதல். கன்றுதல், செய்வினைப் பயிற்சியால் தன்மை மாறுதல். செய்பிழையை நினைந்து வருந்தி மனம் மாறுவார்க்கு அருளல் நல்லறமாதலால், “கன்றுறும் என் கலக்கம்” என்று கூறுகின்றார். இரங்குதல் பேரறம் என்பது குறிப்பு.

     இதனால், செய்பிழையை மறந்து மனம் திரும்பும் என்னை அருளுதல் அறமென்பதாம்.

     (8)