2640.

     கய்லா நடையேன் கருணையிலேன் ஆனாலும்
     நல்லார் புகழும் நமச்சிவா யப்பெயரே
     அல்லாது பற்றொன் றறியேன் அருளாயேல்
     எல்லாம் உடையாய் எனக்கார் இரங்குவரே.

உரை:

      எல்லாம் உடைய பெருமானே, யான் கல்லாதவர்பால் காணப்படும் ஒழுக்கமே யுடையேன்; நெஞ்சில் இரக்கப் பண்பு இல்லாதவன்; ஆயினும், நல்லவர் போற்றிப் புகழும் நமச்சிவாய என்னும் திருப்பெயரே பற்றுக் கோடாகக் கொண்டுள்ளவனே யன்றி வேறொரு பற்றும் இல்லாதவன்; இத் தன்மையனாகிய எனக்கு உன் திருவருள் எய்தாதாயின், என்பால் இரக்கமுற்று அருள் செய்பவர் யாவர் உள்ளனர், கூறுக. எ.று.

     உடல் பொருள்களை யுடைமையாகவும் உயிர்களை அடிமையாகவும் உடையனாகலின் இறைவனை “எல்லாம் உடையாய்” எனப் போற்றுகின்றார். நடை - ஒழுக்கம். கல்லாதார்பாற் காணப்படும் தீயொழுக்கம் என்பால் உள தென்பார், “கல்லா நடையேன்” என்கின்றார். கற்ற வரிடத்து மறவா நிலையில் இருக்கும் அறிவு போல நல்லொழுக்கம் இல்லாதொழிவதும், தீயொழுக்கம் அமைவதும் உண்மையால், ஓரளவு கற்றுளேனாயினும் கல்லாமை பயக்கும் தீயொழுக்கம் என்னிடம் உளது எனற்கு இவ்வாறு கூறுகின்றார். கல்லா வொழுக்கத்தில் தலையாயது இரக்க மில்லாமையாதலின், அதனை விதந்து “கருணையிலேன்” எனக் கூறுகின்றார். கற்றவர் பெருகிய இக்காலத்தும் கல்லா நடையாகிய இரக்க மில்லாமை எங்கும் பரந்து நிற்றலே நன்ஞான நல்வாழ்வுக்கு அமைந்த மண்ணியல் வாழ்வும் துன்ப விருள் சூழ்ந்து கிடத்தற்கு ஏதுவென அறிதல் வேண்டும். கல்லா நடை யுடைமையால் கருணை யிலேனாயினும், நமச்சிவாய என்ற திருப்பெயரைப் பற்றுக் கோடாகக் கொண்டு, உய்தி பெற விழைகின்றேன் என்பார், “நமச்சிவாயப் பெயரே அல்லாது பற்றொன்று அறியேன்” என வுரைக்கின்றார். நமச்சிவாயப் பெயர், உயிர்கள் மலத்தால் மறைப்புண்பதையும், திருவருள் அதனை நீக்கி அறிவொளி நல்குவதையும் கண்டு, நல்லவர் அதனைப் புகழ்ந்தோதிய வண்ணமிருத்தலின், “நல்லார் புகழும் நமச்சிவாயப் பெயர்” என நவில்கின்றார். நமச்சிவாய என்னும் பெயர் ஐந்தெழுத்துக்களை யுடையதாகலின், அதனை ஐந்தெழுத் தென்றும் அஞ்செழுந்தென்றும் சான்றோர் புகன்றுரைப்பர். நமச்சிவாய என்பது சிவனது திருப்பெயர்; “எந்தையார் திருநாமம் நமச்சிவாய” (பல) எனத் திருநாவுக்கரசர் தெரிவிக்கின்றார். சிவாயநம என்னும் பெயர் வேறு; ஐந்தெழுத்து வேறு என மருள லாகாதென்பதற்காக, “நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும் சாமன்றுரைக்கத் தருதி கண்டாய்” (நாகைக்கா) என்று திருநாவுக்கரசர் விளக்குகின்றார். நமச்சிவாய என்பது நமச்சிவாயம் எனவும் வழங்குவதுண்டு. “சீரார் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால்” (மறுமாற்றத்) என நாவுக்கரசர் வழங்குவது காண்க. “நக்கன் எம்பிரான் அருள் திருப்பெயராம் நமச்சிவாயத்தை நான் மறவேனே” (819) என்று வடலூர் வள்ளலும் உரைக்கின்றார். நமச்சிவாயத் திருப்பெயரே உயிர்கட்குப் பற்றுக் கோடாகலின் “நமச்சிவாயப் பெயரல்லாது பற்று ஒன்றறியேன்” என வோதுகின்றார். இது போலவே நம்பியாரூரர், மற்றுப் பற்றெனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன், நற்றவா வுனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” (பாண்டிக்) என வுரைத்தாராக, மணிவாசகர், “என்னே உய்யுமாறு என்றெண்ணி அஞ்செழுத்தின் புனை பிடித்துக் கிடக்கின்றேன்” (சத) எனக் கூறுகின்றார். வடலூர் வள்ளல், “நம்மை யாளுடை நாதன்றன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே” (990) என நவில்கின்றார்.

     இதனால், நமச்சிவாயப் பெயரல்லது பற்றாவது வேறில்லை யென அறிவேனாதலின் எனக்கு அருள் செய்க; அருள்பவர் வேறில்லை என விண்ணப்பித்தவாறாம்.

     (10)