8

8. சிந்தைத் திருப்பதிகம்

 

கொச்சகக் கலிப்பா

 

     அஃதாவது மனத்தின்கண் திருவருளை நினைந்து, அதனை நினைக்கப் பண்ணும் துன்ப நிலைகளை நினைந்து, திருவருள் முதல்வனாகிய சிவனை நினைந்து பாடும் பாட்டுக்கள் பத்துக் கொண்டிருப்பது. சிந்தை, சிந்தித்தல் என்னும் பொருளது; நிந்தித்தல் நிந்தை என வருவது போலச் சிந்தித்தல் சிந்தை என வந்துளது. துன்பக் காலம் இன்பக் காலம் என்ற இரண்டனுள் துன்பம் சுடச் சுடத் தாக்கும் காலத்தில்தான் மனம் பொருளுலகத்தை நினையாமல் இறைவன் திருவருளை நினைப்பது வழக்கம். இன்பத்தில் களிப்பு மயக்கமும், துன்பத்தில் ஒளிரும் விளக்கமும் மனவுணர்வைக் கவ்விக் கொள்ளும்; துன்பத்துக்கு ஏதுவாவனவற்றை எண்ணி அச்செயல்களை நினைந்து வருந்தும்; இப்பதிகத்தில் துன்பக் காரணங்கள் நினைக்கப்படுவதும் தீர்வு வேண்டிச் சிவனருளை நாடுவதும் காணலாம். இதனைத் தொல்காப்பியம் துன்பத்துப் புலம்பல் எனக் கூறுகிறது.

 

      இதன்கண், ஈயாத புல்லர்க்குச் செல்வம் எய்துவிப்பதும் அருட்டுணை நாடாமல் வேறாய துணைகளை நாடுவோரைப் புறக்கணிப்பதும், கல்லாமையும் புலை யொழுக்கங்களும் அருட் பேற்றுக்குத் தடையாதலும், கல்லாரொடு கூடிச் செய்த குற்றங்களை நினைந்து வருந்துவதும், செய்யப்படும் வினைகட்கு நிமித்த காரணம் திருவருளாதலும் பிறவும் சிந்திக்கப்படுகின்றன. திருப்பெயரான் சிறப்பும் திருவைந்தெழுத்தின் நலமும் எண்ணுவதும், இறைவன் திருப்பெயரே பொறியார் பெயர் என்பதும் வள்ளலார் நினைவில் எழுகின்றன.

2641.

     விடைஆர்க்கும் கொடிஉடைய வித்தகஎன் றும்அடியின்
     இடைஆர்த்து நின்றழும்இவ் ஏழைமுகம் பாராமே
     நடைஆர்க்கும் வாழ்க்கையிலே நல்குரவோர்க் கீயாத
     உடையார்க்கோ என்னை உடையாய் உதவுவதே.

உரை:

      விடை யெழுதிய கொடியை உயர்த்தும் வித்தகனே, என்னை முழுதும் அடிமையாக வுடையவனனே, உனது திருவடிக் கீழிருந்து அன்பாற் பிணிப்புண்டு வருந்தும் ஏழையாகிய என் முகத்தைப் பார்க்காமல் உலகியல் நடைக் கமைந்த உடல் வாழ்விலே, பொருளில்லாத வறியவர்க்கு ஈதல் இல்லாத செல்வர்களாகிய உடையார்க்கே அதனை மேலும் நல்குவது என்னையோ, கூறுக. எ.று.

      விடை - எருது எழுதிய கொடி; அதனை உயர்த்திக் காட்டும் இயல்பினால், “விடையார்க்கும் கொடியுடைய வித்தக” என விளம்புகின்றார். வித்தகன் - அறிவன அறிந்து செய்யும் அறிஞன். அடியினிடை ஆர்த்து நிற்றலாவது, திருவடியை நினைந்து அதன்கண் அன்பாற் பிணிப்புண்டிருத்தல். நினைப்பவர் நினைவைத் திருவடியின் நீங்காதவாறு பிணிப்பது மெய்யன்பாகலின், “திருவடியின் இடை ஆர்ந்து நின்றம் இவ்வேழை” எனக் குறித்துரைக்கின்றார். ஆர்ந்து, ஆர்த் தென வலித்தது. இடை-இடம். இடை நின்று ஆர்த்து அழும் என இயைத்து திருவடிக் கீழ் நின்று ஓல மிட்டழும் என வுரைப்பதுமுண்டு. ஏழைக்கு இரண்டும் ஒத்தவாம். அறிவில்லார்க்கே யுரிய ஏழை யென்னும் சொல், பொருளீட்டும் அறிவும் ஆற்றலுமில்லாத வறியவர்க்கும் வழங்குவ தியல்பாதலால், பொருளில்லாமை தோன்ற, “இவ்வேழை” என்று கூறுகின்றார். இல்லாத ஏழைகட்கு ஈதலே அறம்; “வறியார்க் கொன்று ஈவதே ஈகை” (குறள்) என்பர் திருவள்ளுவர். அங்ஙனமாக, அன்பால் நினைந்தழும் ஏழைக்கு உதவுகிறாயில்லை என்பார், “நின்றழும் இவ்வேழை முகம் பாராமே உடையார்க்கோ உதவுவதே” என்று கேட்கின்றார். முகம் பார்த்த வழி. இரக்கம் தோன்றி ஈதற்கண் உள்ளத்தைச் செலுத்துமாகலின், “முகம் பாராமே” என மொழிகின்றார். ஈகைக்கண் செல்லும் உள்ளத்தைப் பொருளாசை இடை நின்று தடுக்குமாக, அதனை உடைத் தெறிந்துவிட்டு ஈதலைச் செய்வது வன்மை யுடையார்க்கே இயல்வதாதலைக் கண்டு சான்றோர், செல்வன் சிறப்பைக் கூறுமிடத்து, “இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க வல்லான் போல்வதோர் வண்மையும் உடையன்” (கலி. 47) எனப் புகழ்வது காண்க. உலகியற்கு ஒத்த ஒழுக்கம் பொருந்தியது உடல் வாழ்க்கையாதலால் “நடையார்க்கும் வாழ்க்கை”, என விளம்புகிறார். நடை - ஒழுக்கம். “உலகத்தோடு ஒட்டு ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலாதார்” என்பது அறநூல் (குறள்). நல்குரவோர் - வறியவர். உடையார் - செல்வ முடையவர். “உடையார் முன் இல்லார் போல்” (குறள்) என்பது காண்க. வறியவர்க்கு ஒன்று ஈயாத செல்வர்களை, “நல்குரவோர்க் கீயாத உடையோர்” என வுரைக்கின்றார். “ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்” (குறுந். 63) என்றலின் இரண்டும் உடையவரே “உடையார்” ஆவர்; அவருள் ஈதல் இல்லாத உடையார் என்பார், “நல்குரவோர்க்கு ஈயாத உடையோர்” என்கிறார் என்பதும் ஒன்று. இது வெளிப்படை என்னும் அணி, செல்வ முடையார் பலர்க்கு ஈயும் செயல் உண்டாகாமைக்கு ஏது, பொருட் பற்றை மிகுவிக்கும் ஆணவமலத் தடிப்பாகும்; உடையிற் பற்றிய அழுக்கைப் போக்குதற்கு மேலும் பல அழுக்குப் பொருள்களைக் கலப்பதுபோலச் செல்வரிடையே மேன்மேலும் செல்வ வகைகள் சேர்க்கப்படுவதாகும். மலத்தடிப்புக்கு இரையாகாதவர் திருவருட் செல்வராகின்றனர்; இரையாகுவோர் செருக்குற்று உலகு பழிக்கும் நிலையை எய்துகின்றனர்; இக்கருத்து வெளிப்படுதற் பொருட்டே, “ஈயாத உடையார்க்கு உதவுவது என்னை” என வினவுகின்றார்.

     இதனால், உலகில் ஈகைப் பண்பில்லாத செல்வர்க்கு மேலும் செல்வம் சேரச் செய்யும் காரணம் ஆராய்ந்தவாறாம்.

     (1)