2643. கல்லா ரொடும்திரிந்தென் கண்ணேநின் தாள்வழுத்தும்
நல்லார் தமைக்காண நாணுகின்றேன் ஆனாலும்
வல்லாய்நின் தன்னைஅன்றி மற்றொன் றறியேன்நான்
எல்லாம் அறிவாய்க் கிதனைஇயம் பல்என்னே.
உரை: எனக்குக் கண் போன்றவனே, எல்லாம் வல்லவனே, கல்லாத மக்களொடு கூடிப் பன்னாள் திரிந்தேனாதலால், நின் திருவடியைத் தொழுதேத்தும் நல்லவர்களைக் காண்பதற்கு இப்பொழுது நாணமடைகின்றேன்; ஆயினும், நின் திருவடியை யன்றிக் கொள்ளத் தக்கது வேறு யாதும் இல்லை என்பதறிந்து கொண்டேன்; எல்லாம் அறியும் பெருமானாகிய உனக்கு இதனை யான் எடுத்துரைப்பது மிகையாம். எ. று.
வயிறு வளர்த்தற்குரிய தொழி லறியா தொழிந்தவரையும் கல்லார் என்பவாகலின், கற்றற்குரிய மெய்ந்நூல்களைக் கல்லாதவர்களைக் கல்லாரென்கின்றார் எனக் கொள்க. அவர்களோடு கூடித் திரிந்து பெறற்குரிய மெய்யுணர்வைப் பெறாது நெகிழ்ந்தமை, மெய்ஞ்ஞானிகளைக் காணும் போது நினைவில் தோன்றி வருத்துதலால், “கல்லாரொடும் திரிந்து நின் தாள் வழுத்தும் நல்லார்தமைக் காண நாணுகின்றேன்” என நவில்கின்றார். நல்லார் - நன்மை விளைவிக்கும் ஞானமும் ஒழுக்கமும் உடைய பெரியோர். நாணுதல் - மனம் சுருங்குதல். நல்லாரோடு கூடி, நன்ஞான நல்லொழுக்கங்களைப் பெற்றேனாயினும், நல்லா ரெல்லாரினும் வல்லவனாகிய நின் திருவடி ஞானமல்லது உயிர்க்கு இன்றியமையாத பெரும்பொருள் வேறொன்றும் இல்லை என்றும், அதுவே பெறத் தக்க ஒன்று என்றும் அறிந்து கொண்டேன் என்பார், “நின் தன்னையன்றி மற்றொன் றறியேன்” என்றும் எடுத்துரைக்கின்றார்; “நின்னையன்றி” என்பதற்கு பரம்பொருளாம் நின்னையன்றி என வுரைப்பினும் பொருந்துவதாம். என்னுள் நிலவும் இதனை நீ நன்கறிவாய் என்றற்கு, “எல்லாம் அறிவாய்” எனவும் இதனை நினைந்து வாயாற் சொல்வது, அறிந்தார்க்கு அறிந்த பொருளை அறிவிக்கும் சிறு செயல் போல்வதாம் என்பாராய், “நான் இதனை இயம்பல் என்னே” எனவும் சொல்லுகின்றார்.
இதனால், தொடக்கத்திற் கல்லாரொடு கூடித் திரிந்ததும் பின்னர் நல்லாரைக் காண நாணியதும் நினைந்து வருந்தியவாறாம். (3)
|