2644.

     கள்ளநெறி கொள்ளும் கடைநாயேன் என்னினும்நின்
     வள்ளல் மலர்த்தானே வழுத்துகின்றேன் என்னுடைய
     உள்ள மெலிவோ டுடல்மெலிவும் கண்டும்அந்தோ
     எள்ளளவும் எந்தாய் இரங்கா திருந்தனையே

உரை:

      எந்தையே, கள்ளச் செயல் புரியும் நெறியில் இயலுகின்ற கடைப்பட்ட நாய் போன்றவனாயினும் உன்னுடைய வளமான பூப்போன்ற திருவடிகளையே வாழ்த்தி வணங்குகின்றவன் யான்; என்னுடைய மன மெலிவையும் உடல் மெலிவையும் பார்த்தும், ஐயோ, எள்ளத்தனையேனும் இரக்கம் கொள்ளாமல் இருக்கின்றாயே, இது முறையாகாதே. எ.று.

     கள்ள நெறி - பிறரை வஞ்சித் தொழுகும் வழி முறைகள். கள்ள நெறியை மேற்கொள்வது கீழ்மை நிலையாதலால், புல்லிய நாயினும் கடையவனாயினேன் என்பார், “கடை நாயேன்” எனக் கூறுகின்றார். இவ்வண்ணம் கள்ளமான குணமும் செயலும் கொண்டு நாய் போற் கீழ்நிலை யடைந்தேனாயினும், அருள் வளம் கொழிக்கும் உன் திருவடிகளை வாழ்த்தி வழிபடுவதைக் கைவிட்டிலேன் என்றற்கு “வள்ளல் மலர்த்தாளே வழுத்துகின்றேன்” என இசைக்கின்றார். வள்ளல், இங்கு வளமுடைமை மேலாதாம்; “வள்ளற் பெரும் பசுக்கள்” (திருப்பாவை) என ஆண்டாள் உரைப்பது காண்க. வழுத்துதல் - வாழ்த்துதல். கருதும் நற்பயம் எய்தாமையால் மனம் ஊக்க மிழந்து வலி குன்றுதல் புலப்பட, “உள்ள மெலி” வென்றும், உடல் வளர்ச்சிக்கு உள்ளம் காரணமாதலால், உள்ள மெலிவு உடல் மெலிவைச் செய்யும் என்பது பற்றி “என்னுடைய வுள்ள மெலிவோடு உடல் மெலிவு கண்டும்” எனக் கூறுகின்றார். உலகினர் போலின்றி, உடல் மெலிவையும் உள்ள மெலிவையும் ஓரொப்பக் காண்பவனாகிய நீ கண்டிருந்தும் காணாதான் போல அருள் செய்யாது ஒழிவது நினக்குப் பொருந்தாது என்பாராய், “மெலிவு கண்டு அந்தோ எள்ளளவும் இரங்கா திருந்தனையே” என்று வருத்துகின்றார். எள்ளத்தனை - சிறிதளவு. எந்தாய் என்பது முறையீட்டுக் குறிப்பு. அந்தோ - இரக்கக் குறிப்பு.

      இதனால் தமது கள்ள நினைவு செயல்களைப் புரியும் குற்றத்தை யுணர்ந்து எடுத்தோதித் திருவருளை நல்குக என வேண்டியவாறாம்.

     (4)