2645. சீர்துணையார் தேடும் சிவனேநின் தன்னையன்றி
ஓர்துணையும் இல்லேன்நின் ஒண்பொற் பதம்அறிய
கார்துணையா நாடும் கலாபிஎன நாடுகின்றேன்
ஆர்துணைஎன் றையா அகல இருந்தனையே.
உரை: சிறப்புடைய துணைவர்களான பிரமனும் திருமாலும் காணத் தேடும் அருமையையுடைய சிவபெருமானே, உன்னையன்றி வேறே ஒரு துணையும் இல்லாதவன் யான்; இது உனது அழகிய ஒள்ளிய திருவடி யறிந்த வுண்மை; கரிய மழை முகிலைக் காணக் களிக்கும் மயில் போல உன் திருவருளைப் பெற விரும்புகிறேன்; இங்ஙன மிருக்க, ஐயனே, எனக்குத் துணை புரிபவர் யாவருளர் என்று எண்ணி நீ அருளாமல் இருக்கின்றாய், சொல்லுக. எ.று.
சீர், சிறப்பு; புகழுமாம். படைத்தற் றொழிலாற் பிரமனும் காத்தலில் திருமாலும் சிறப்பும் புகழும் பெற்றுச் சிவனுடைய முத்தொழிற்குத் துணை செய்பவர் என நூலோர் கூறுவதால், “சீர் துணைவர்” என்றும், அவர்களும் முறையே பசுபாச ஞானங்களின் உருவாய்ச் சிவஞானத் திருவுருவாகிய சிவத்தை தேடுகின்றனர் எனச் சைவ புராணங்கள் ஓதுதலால், “துணைவர் தேடும் சிவனே” என்றும் கூறுகின்றார். “அங்கமலத் தயனொடுமால் ஆகிமற்று மதற்கப்பால் ஒன்றாகி யறிய வொண்ணாச் செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை” (ஆரூர்) என அப்பரடிகள் அறிவுறுப்பது காண்க. அருந்துணை யெனவும் பெருந்துணை யெனவும் பெரியோர் பாராட்டுதலால் உன்னையே துணையாகக் கொண்டுள்ளேன் என்பதை நீயே நன்கறிவாய், வேறு சான்று வேண்டா என்றற்கு, “நின் ஒண்பொற்பதம் அறிய நின்னையன்றி ஓர் துணையும் இல்லேன்” எனக் கூறுகின்றார். ஞான வொளியும் பொன்னிற அழகும் உடைமை பற்றிச் சிவன் திருவடியை, “நின் ஒன் பொற்பதம்” என்று சிறப்பிக்கின்றார். கார்முகில் கண்டு கலாபம் விரித்தாடுவது மயிற்கியல்பாதலின், “கார் துணையா நாடும் கலாபி யென” உரைக்கின்றார். கலாபம் தோகையாதலால், தோகை மயிலைக் கலாபி எனக் காட்டுகின்றார். மனத்தில் நிறைந்துள்ள அன்புத் துடிப்பைத் தெரிவித்தற்குக் “கலாபி யென நாடுகின்றேன்” எனக் கனிந்துரைக்கின்றார். அருளின்பம் தாராமை தோன்ற, “ஆர் துணை யென்று அகல இருந்தனை” என்று முறையிடுகின்றார்.
இதனால், நின் திருவடி யறிய யான் வேறு துணை நாடாதவ னென்பதறிந்தும் அருள் புரியாமல் விலகி யிருக்கின்றது பொருந்தாது என முறையிட்டவாறாம். (5)
|