2647.

     வெள்ள மருவும் விரிசடையாய் என்னுடைய
     உள்ள விரிவும் உடல்மெலிவும் கண்டிருந்தும்
     தள்ளரிய நின்னருள்ஓர் சற்றும் புரியாமே
     கள்ளவினைக் கென்உளத்தைக் கைகாட்டி நின்றனையே.

உரை:

      கங்கையாறு தங்கும் விரிந்த சடையையுடைய பெருமானே, உள்ளத்தின் விரிந்தோடும் இயல்பையும் உடலின் மெலிவையும் கண்டிருந்தும் நீக்குதற் கரிதாகும் நின்னுடைய திருவருளை ஒருசிறிதும் செய்யாமல், கள்ளத் தன்மை கொண்ட வினைக்கு என் மனத்தைக் காட்டி, இரையாக்கி விட்டாய்; என் செய்வேன் எ.று.

     மண்ணுலகு நோக்கி வந்த கங்கைப் பெருக்கைத் தன் சடையை விரித்துத் தாங்கிக் கொண்டமையின், “வெள்ளம் மருவும் விரிசடையாய்” என விளம்புகிறார். விரிசடையிற் கொண்டு கங்கையின் வேகம் கெடுத்தாண்டமையின் மணிவாசகப் பெருமான் சிவனை “வெள்ளம் தாழ் விரிசடையாய்” (சதகம்) எனக் கூறுகிறார். நினைக்கப்படும் பொருட்கண் ஒன்றி ஒருமை யுறாது பல தலையாய் விரிந்தோடுவதற்கு வருந்துவாராய், “உள்ள விரிவும்” எனவும், உடல்வலி குன்றுதல் தோன்ற, “உடல் மெலிவும்” என்றும் உரைக்கின்றார். உள்ளத்தின் வழி யுடம்பும், உடம்பின் வழி உள்ளமும் இயங்கும் இயல்பினவாதலால் இரண்டையும் சேரக் கூறுகின்றார். உள்ளம் உரனுடையதாயின் உடல் ஆக்கம் பெறுதலின், உள்ளத்துக்கு முதலிடம் தந்து மொழிகின்றார். விரிதல், பல பொருள்களின் மேல் பன்னெறி மேற் கொண்டு ஒன்றிலும் ஒன்றாது அலைதல். திருவருளின் பெறற் கருமையும் எல்லாவற்றிலும் மேலாம் பெருமையும் உடையதாதல் கண்டு “தள்ளரிய நின்னருள்” எனவும், அது சிறிது எய்தின் பெறும் நலம் பெரிது என்பாராய், “ஓர் சற்றும் புரியாமே” எனவும், பிறவிக் கேதுவாகிய வினைகளைச் செய்தற்கு உள்ளத்தை ஊக்கி விடுகிறாய் என்பார், “கள்ள வினைக் கென்னுளத்தைக் கைகாட்டி நின்றனையே” எனவும் இயம்புகிறார். தன்னைச் செய்யும் வினை முதலுக்கு என் விளைவு நின் பிறவிக்கு ஏதுவாம் என்பதை முன்னுறக் காட்டா தொழிவதால் “கள்ள வினை” என்றும், வினை மேற் செல்ல விடாமல் தடுத்து ஒழிந்தமை பற்றி, “உளத்தைக் கைகாட்டி விட்டனை” என்றும் கூறுகின்றார். வினையைச் செய்யும் கருவிகளாம் உள்ளம், வாய், மெய் ஆகிய மூன்றனுள் உள்ளம் ஏனை யிரண்டிற்கும் முதலாதலால், வினைக்கு உள்ளத்தைக் காட்டினை என வுரைக்கின்றார். “உள்ளத்தின் அசைவும் அசைவின்மையும் வினையாம்” (இருபா) என்பர் அருணந்தி சிவனார்.

      இதனால், உயிர்கள் வினை செய்தற்கு நிமித்த காரணம் திருவருள் என்பது விளக்கியவாறாம்.

     (7)