2648.

     என்னுரிமைத் தாய்க்கும் இனியாய்நின் ஐந்தெழுத்தை
     உன்னுநிலைக் கென்னை உரித்தாக்க வேண்டுதியேல்
     மன்னுலகில் பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்
     தன்னுடைய எண்ணந் தனைமுடிக்க வேண்டுவதே.

உரை:

      என்னைப் பெற்ற உரிமை கொண்ட தாயினும் இனிமையானவனே, நினக்குரிய திருவைந்தெழுத்தை எண்ணி வழிபடும் நிலைமைக்கு என் வாழ்வை உரியதாக்கத் திருவுள்ளம் கொள்வாயாயின், நிலை கொண்ட இவ்வுலகில் பொன்னும் பொருளுமுடைய செல்வர்களின் மனைவாயிலிற் காத்திருந்து மனமயர்ந் துளேனாதலின், என் எண்ணங்கள் நிறைவேற வேண்டுகின்றேன். எ.று.

     பெற்ற தாய்க்குத் தான் பெற்ற பிள்ளைபால் உள்ளது நீங்காத உரிமையாதலால், பெற்ற தாய் என்னாது “உரிமைத் தாய்” என்று சிறப்பிக்கின்றார். உடலை யளித்த தாயினும், உடலோடு கருவி கரணங்களையும் உலக வாழ்க்கையையும் அளித்த இறைவன் பெரிய தாயாதல் பற்றி, “உரிமைத் தாயினும் இனியாய்” என இறைவனைப் பரவுகின்றார். நமசிவாய என்ற சிவனது திருப்பெயரில் மொழிக்கு முதலாம் தன்மை வாய்ந்த எழுத்தைந்து உள்ளமையால், அப்பெயரை ஐந்தெழுத்தெனக் கூறுவது சைவ மரபாதலின், “நின் ஐந்தெழுத்து” எனக் கூறுகின்றார். மொழிக்கு முதலிலும் இடையிலும் கடையிலும் நின்றும் கலந்தும் இயங்கும் உயிர் மெய் யெழுத்து வகையில் வல்லினத்துள் ஒன்றும் மெல்லினத்துள்ளும் இடையினத்துள்ளும் இவ்விரண்டாக நான்கும் பொருந்தியது நமசிவாய என்ற பெயர் என அறிக. மொழிக்கு முதன்மை பெறும் உயிர் மெய்யினத்து ட்க ச த ந ப ம வ ய ஞ என்பவற்றுள், சிவயநம என்ற ஐந்தும் நிற்பது தனிச் சிறப்பாம். ஒருவன் தவப் பயனாக ஞானாசிரியன் பெறும் சிவஞானத்தை மறவாது ஓதி உறுதி பெறுதற்குச் சிவாய நம என்ற ஐந்தெழுத்தும் பற்றுக் கோடாதலால், “நின் ஐந்தெழுத்தை உன்னும் நிலை” என வுரைக்கின்றார். உயிரை அத்தவ நிலைக்கு உரியதாக்குவது இறைவன் திருவருட் குறிப்பாதலால் “என்னை உரித்தாக்க வேண்டுதியேல்” என்று கூறுகின்றார். என்னை -என் ஐ எனப் பிரித்து, என்னுடலை இயக்கும் தலைமைப் பொருளாகிய உயிரை எனக் கொள்க. உரியனாக்க என்னாமல் உரித்தாக்க என்பதனால் உயிரெனப் பிரித் துரைக்கப்பட்டது. மன்னுலகு - நிலை கொண்ட வுலகம். மன்னுதல் - நிலைத்தல். பொருளுடையார் மனைவாயிலில், இல்லாதவர் அப்பொருட் கொடை நயந்து காத்துக் கிடத்தல் உலகியல் வழக்காதலால், “பொன்னுடையார் வாயில்தனைக் காத்தயர்ந்தேன்” எனவும்; பொருள் கருதிய என் எண்ணத்தைப் பொருள் தந்து நிறைவு செய்ய வேண்டும் என்பார், “எண்ணம் தனை முடிக்க வேண்டுவதே” எனவும் இயம்புகிறார். வேண்டும் என்பது வேண்டுவ தென வந்தது; வரவிடல் வேண்டும் என்பது, “மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே” (திருமுகப்) என வருதல் போல.

     இதனால், திருவைந்தெழுத்தை யோதும் நிலையினை நல்கிப் பொன் வேண்டும் என் எண்ணத்தையும் முடித்தருள்க என மொழிந்தவாறாம்.

     (8)