2649. குற்றம்எலாம் நல்ல குணமாகக் கொண்டருளும்
உற்றதுணை நீயேமற் றோர்துணையும் இல்லைஎன்றே
நற்றலைமை யாம்உனது நாமம் நவில்கின்றேன்
கற்றவனே என்றனைநீ கைவிடில்என் செய்வேனே.
உரை: கற்கப்படும் கல்வியே யுருவாயவனே, எம் போல்வார் செய்யும் குற்றம் யாவையும் குணமாகக் கருதிப் பொறுத்தருளும் நெருங்கிய துணைவனாகுபவன் நீயேயன்றி வேறொருவரும் இல்லை யென்ற எண்ணத்தால் நல்ல தலைவனாகிய உனது திருப்பெயரையே நாளும் ஓதுகின்றேன்; அத்தகைய என்னை நீ இனிக் கைவிடுவாயாயின் யான் என்ன செய்குவேன், கூறுக. எ.று.
கல்வி நல்கும் ஞானமும் இன்பமும் யாவும் மெய்ப்பொருளாகிய சிவனையே யடையச் செய்தலால், “கற்றவனே” எனப் புகழ்கின்றார்; “கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்” எனச் சான்றோர் உரைப்பது காண்க. நன்னூல்களைக் கற்றுப் பெறும் அறிவு, செய்யப்படும் குற்றங்களின் முதற் காரணத்தைக் காட்டி மனத்தில் அருளையும் பொறுமையாகிய பண்பையும் நிலவுவித்தலால், “குற்றமெலாம் நல்ல குணமாகக் கொண்டருளும் நற்றுணையே” என்று கூறுகின்றார். குற்றத்தைக் கண்டு காரண வறிவாற் குணம் காணாவிடத்துத் துணை புரியும் செயற் பண்பு சிறவாமை பற்றி, “அருளும் நற்றுணையே” என நவில்கின்றார். உற்ற துணை - இன்றியமையாப் போதில் செய்யப்படும் துணை. இத்தகைய பண்புடையார் இறைவனையன்றி வேறே ஒருவரும் இன்மை பற்றி, “நீ யன்றி மற்று ஓர் துணையும் இல்லை” என வுரைக்கின்றார். துணைவனது துணைமை நலம் காண்பவன் அவனை நாளும் தொழுதேத்துதல் இயல்பாதலால், “உனது நாமம் நவில்கின்றேன்” எனவும், துணையாவதுடன் நன்னெறிக்கண் செலுத்துவதும் ஊக்குவதும் செய்தலால் “நற்றலைமையாம் உனது” என்றும் பரவுகின்றார். தலைமை - ஆகு பெயரால் தலைவன் என்னும் பொருள்பட நின்றது, “பணியுமாம் என்றும் பெருமை” (குறள்) என்றாற் போல. துணைவரையும் தலைவரையும் நன்றி யறிவோடு நாளும் பாராட்டுவதென்பது அவர்களின் பெயரை அன்புடன் சொல்லிப் புகழ்வதாகும்; ஆதலால், “நினது நாமம் நவில்கின்றேன்” எனக் கூறுகிறார். நாமம், நமச்சிவாய என்னும் திருப்பெயர். “நானேயோ தவம் செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்” (திருவாச) என மணிவாசகரும், “உன் நாமம் என்னாவில் மறந்தறியேன் (அதிகை வீரட்) என நாவரசரும் சொல்லுவது காண்க. குணநலங்களை நினைந்து புகழ் பாடும் பெயரை நாளும் ஓதி வந்தால், ஓதுபவர் ஒருநாளும் கெட விடப்படார் என்ற வுண்மை பற்றி, “என்றனை நீ கைவிடில் என்செய்வேன்” என்கின்றார். “என் செய்வேன்” என்பது, எனக்கு உற்ற செயல் இதனின் வேறு ஒன்றுமில்லை என்று உணர்த்தி நின்றது.
இதனால், தலைமை யறிந்து நாமம் பயின்றேனாதலால் என்னைக் கைவிடலாகாது என முறையிட்டவாறாம். (9)
|