2650. அறியாப் பருவத் தறிவுறுத்தி ஆட்கொண்ட
நெறியானே நின்ஆணை நின்ஆணை நின்ஆணை
பொறியார்நின் நாமம் புகலுவதே அன்றிமற்றை
வெறியார்வன் நாமமொன்றும் வேண்டேன்நான் வேண்டேனே.
உரை: அறிவறியாப் பருவத்திற் போந்து மெய்யறிவு தந்து அடியவனாகிய என்னை ஆண்டருள் புரியும் செந்நெறியை யுடையவனே, நினது திருவடி ஆணையாக முக்காலும் சொல்லுகிறேன்; திருநிறைந்த நின் திருப்பெயரை நாளும் எண்ணி ஓதுவது தவிர திருவில்லாதவருடைய வன்மையான பெயர்களைச் சிறிதும் நான் விரும்ப மாட்டேன், காண். எ.று.
அறியாப் பருவம் வேறு; அறிவறியாப் பருவம் வேறு. பொறி புலன்களின் வாயிலாகப் பெறலாகும் உலகியற் பொருளறிவு பெறாத இளமைப் பருவம், அறியாப் பருவம்; மனத்தாற் பொருள் நலங்களைத் தெரிந்தாய்ந்து பெறும் உண்மை யறிவு எய்தாத பருவம், அறிவறியாப் பருவம். அதனையே பரம்பொருளோடு உரையாடும் வடலூர் வள்ளல், “அறியாப் பருவம்” என இளமைக் காலத்து இயற்கை யறிவு நிலையைக் குறிக்கின்றார். அந்தக் காலத்தேயே அறிவறிவு தந்து உண்மை யுணர்வித்து ஆண்டருளும் திருவருள் நெறியை, “அறிவுறுத்தி ஆட்கொண்ட நெறியானே” என வுரைக்கின்றார். ஆட்கொள்ளும் நெறி என்று சொல்லாமல், “ஆட் கொண்ட” என இறந்த காலத்தாற் சொல்லியது, வழி வழியாக வந்து கொண்டிருப்பது இறைவனது இவ்வருள் நெறி என்பது வற்புறுத்தற் பொருட்டு. இது கால விடங்களால் மாறா வியல்பிற்றாகலின், “நின்னாணை நின்னாணை நின்னாணை” என வலியுறுக்கின்றார். இத் திருவருள் ஞானம் பொருளாக நிலவும் செந்நெறிக்கும் முதல்வனாதலை யுணர்பவர், அந்நெறியும் பொருளும் நமச்சிவாய என்னும் திருப்பெயர்க்கண் உள்ள எழுத்தைந்தும் இனி துணர்வார்க்கு நன்கு புலனாதலால், பொருணிறைந்த அப்பெயரைப் “பொறியார் நின் நாமம்” என்று புகழ்கின்றார். “பொறி திரு. பூவெனப்படுவது பொறி வாழ் பூவே” என்பது காண்க. இப்பொருண்மை விளங்கவே, திருநாவுக்கரசர் “எந்தையார் திருநாமம்” என்று இயம்புகின்றார். இது போல்வன, நோக்கியே “சொற் குறுதிக்கு அப்பர் எனச் சொல்” என்று பெரியோர் இசைக்கின்றார்கள். மற்றவர் பெயர்களில் எழுத்தொவ்வொன்றும் பொருளுடையதாக இல்லாமை பற்றியே “மற்றை வெறியார் வன்னாமம்” என இகழ்கின்றார். பெயர்கள் வல்லலோசையும் பொருளில்லாத எழுத்தும் கொண்டமை தோன்ற “வன்னாமம்” என்கின்றார். அவ்வன்னாமங்களை யோதுவதால் ஞானப் பயன் இல்லாமையால் யான் ஒருகாலும் விரும்புவதில்லை எனத் தெளிவு படுத்தற்கு, “ஒன்றும் வேண்டேன் நான் வேண்டேன் என வுரைக்கின்றார். ஒன்றும், சிறிதும், பிறர் அப் பெயர்களை ஓதின் ஓதுக; யான் ஓதமாட்டேன் என்பாராய், “நான் வேண்டேன்” என்று எடுத்துரைக்கின்றார்.
இதனால், செந்நெறி முதல்வனாகிய நினது பொறியார் பெயரை யல்லது பிறரது பயனில்லாப் பெயரை ஓத மாட்டேன் என வுரைத்தவாறாம். (10)
|