9

9. உய்கைத் திருப்பதிகம்

 

     அஃதாவது, உய்யும் நெறி கருதிச் சிவபெருமானைப் பராவும் பாடல் பத்துக் கொண்ட தொகுதி.
 

      இதன்கண், சிவபிரானுடைய திருப்பெயரும் திருவடியும் திருவருளும் உயிர்கட்கு உய்தி தருவன; அருள் சிறிது நல்கினும் பெரும் பயன் தருவதாம்; திருவடியல்லது பிற தெய்வம் நினையாமை உய்தி வகையுள் ஒன்று; நீயே என்னை நாடி வந்து திருவருளை நல்குதல் உய்திக் கேதுவாம்; காமத்தால் வருந்துவோர்க்கு மங்கை பங்கனாகிய நீ யல்லது உய்தி நல்குவோர் பிறரில்லை; உன்னைப் பாடிப் பரவுவது உய்திப் பேற்றுக்கு நன்னெறியாம்; உன்னைப் போற்றித் தியானிக்கும் பத்தி நெறியும் உயர் நெறியாம் என்பன முதலிய கருத்துக்கள் ஓதப்படுகின்றன.

 

கலி விருத்தம்

2651.

     திருவும் சீரும்சி றப்பும்தி றலும்சற்
     குருவும் கல்வியும் குற்றமில் கேள்வியும்
     பொருவில் அன்னையும் போக்கது தந்தையும்
     தரும வெள்விடைச் சாமிநின் நாமமே.

உரை:

      செல்வமும் புகழும் சிறப்பும் ஆற்றலும் சற்குருவும், கல்வியும், குற்றமில்லாத கேள்வியும், ஒப்பில்லாத தாயும் குற்றம் நீக்கும் தந்தையும், அற வுருவாகிய வெள்ளெரு தேறும் சிவசாமியாகிய நினது திருப்பெயராகும். எ. று.

     திரு, செல்வ முடைமையா லுளதாகும். பொற்பு-சீர், மெய்ந் நலம் விளைவிக்கும் அழகு.சிறப்பு - நல்லறிவு நற்செயல்களால் உண்டாகும் மேன்மை. ஆற்றல், செய்வினை நலம். சற்குரு, மெய்யுணர்வு நல்கும் ஆசிரியன். தீ நெறிக்கண் செலுத்தாத கேள்வியறிவு. “குற்றமில் கேள்வி” எனப்படுகிறது. ஒப்பில்லாத தூய அன்புடைமையால், “பொருவில் அன்னை” என்றும், தீ நெறி விலக்கிச் சான்றாண்மை பெறுவிப்பதால் “போக்கறு தந்தை” யென்றும் கூறுகின்றார். சிவபெருமான் ஊரும் எருது வெள்ளை நிறமும் அறவுருவும் உடைய தென்பவாகலின் “தரும வெள்விடை” எனப் புகழ்கின்றார். சாமி - தலைவன். திருப்பெயர் - நமச்சிவாய என்பது.

     இதனால், திருவும் சீரும் முதல் தாயும் தந்தையு மீறாக வுள்ள நலமனைத்தும் சிவபெருமான் திருப்பெயராகும் என வுரைத்தவாறாம்.

     (1)