2652.

     பொய்ய னேன்பிழை யாவும்பொ றுத்தருள்
     செய்ய வேண்டும்நின் செம்பொற்ப தமலால்
     அய்ய னேமுக்க ணாஇவ் அடியனேற்
     குய்ய வேறுபு கல்இலை உண்மையே.

உரை:

      தலைவனே, மூன்று கண்களை யுடையவனே, பொய் மொழியும் பொய்ச் செய்கையுமுடைய பொய்யனாகிய என்னுடைய பிழைகள் யாவையும் பொறுத்து எனக்கு அருள் புரிய வேண்டும். அடியவனாகிய எனக்கு உன்னுடைய செம்பொன் போன்ற திருவடியல்லது உய்தி பெறற்குரிய புகலிடம் வேறில்லை; இஃது உண்மை எ.று.

     நினைவிலும் சொல்லிலும் செயலிலும் பொய் நிறைந்தவன் பொய்யன்; யான் பொய்யனாதலால் என்னுடைய குற்றங்கள் மிகப் பலவாயினும் அவற்றை யெல்லாம் பொறுத்து எனக்கு நின்னுடைய திருவருளை நல்க வேண்டுகிறேன் என்பார், “பிழை யாவும் பொறுத்து அருள் செய்ய வேண்டும்” என்று கூறுகிறார். பிழைகளில் ஒன்றேனும் எஞ்சுமாயின் விளைவு பெருந் தீதாமாதலால் அறவே பொறுத்தருள்க என்பாராய், “யாவும்” எனக் குறிக்கின்றார். செம்பொன்னின் நிறமும் ஒளியுள் அழகும் உடையவை யாதலால், “செம்பொற்பதம்” என்று புகழ்கின்றார். பதம் - ஈண்டுத் திருவடி மேற்று. ஐயன், தலைவன், அடியனேன் எனத் தம்மைச் சுட்டிக் கூறுதலின் “இவ்வடியனேன்” எனச் சொல்லுகின்றார். திருவரு ளென்பது திருவடி நீழல்; ஆகு பெயரால், “பதமலர்” என்கிறார். செல்வர் அருள் பெற்று வாழ்பவரைத் “தாணிழல் வாழ்நர்” (புற. 161) என்றும், வாழ்வைத் “தாணிழல் வாழ்க்கை” (புறம். 379) என்றும் சான்றோர் உரைப்பது மரபு. நினது திருவடி நீழலே எனக்கு அழியாப் பேரின்ப வாழ்வளிக்கும் புகலிட மென்பாராய். “உய்ய பேறு புகல் இலை” எனப் புகல்கின்றார். புகல் - பாதுகாப்பாய இடம். உய்தல் உயிர் வாழ்தல். பொய்யனாகலின் எனது இவ் வேண்டுகோள் பொய்யன் றென்றற்கு, “உண்மை” என வுரைக்கின்றார்.

     இதனால், பொய்யனாயினும் எனக்குப் புகலாவது உனது திருவடியே எனத் தெரிவித்தவாறாம்.

     (2)