2653.

     கள்ள நெஞ்சக னேனும்க டையனேன்
     வள்ளல் நின்மலர் வார்கழற் பாதமே
     உள்ளு வேன்மற்றை ஓர்தெய்வ நேயமும்
     கொள்ள லேன்என்கு றிப்பறிந் தாள்கவே.

உரை:

      கள்ள நினைவுடைய நெஞ்சினை யுடையனாய் மக்களிற் கீழ்ப்பட்டவனாயினேன்; ஆயினும் திருவருள் வள்ளலாகிய நின்னுடைய நீண்ட கழலணிந்த திருவடியை உள்ளத்திற் கொண்டிருப்பேன்; அன்றியும் உன்னை யொழிய வேறு தெய்வங்கள்பால் பற்று வைப்பதில்லேனாதலால், என் கருத்தறிந்து அருள் புரிக. எ.று.

     தீய நினைவுகளைக் கொண்டு மொழியாலோ மெய்ப்பாட்டாலோ புலப்படுத்தாது மறைக்கும் நெஞ்சு, “கள்ள நெஞ்சம்” எனப்படும்; அதனை யுடையவன் எனத் தம்மைக் குறிக்கின்றாராதலால், “கள்ள நெஞ்சகனேன்” என்றும், அதனாற் கீழ்மை யுற்றவன் என்பாராய்க் “கடையனேன்” என்னும் கூறுகின்றார். நெஞ்சகனேனும் கடையனேன் என்பதை, நெஞ்சகனாயினும் நும் கடையனேன் எனக் கொண்டு, நெஞ்சுடையனானாலும் உமது கடைவாயிலில் காப்பவன் என வுரை நயம் கூறுவதுண்டு. திருவருளாகிய செல்வத்தை யாவர்க்கும் வரையாது வழங்குவது பற்றி “வள்ளல்” என்கிறார். “பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார்” (வாழ்கொழி) எனத் திருஞானசம்பந்தர் பாடுவது காண்க. மலர்ப்பாதம்; வார்கழற் பாதம் என இயையும். மலர் போன்ற பாதம், மலர்ப்பாதம்; நீண்ட கழலணிந்த பாதம், வார்கழற் பாதம், கழல் - வீரர் அணியும் காலணி, பாதமே யுள்ளுவேன் என்றவிடத்து ஏகாரம், தேற்றம். உள்ளுதல் - மறவாது நினைத்தல். “உள்ளுவன் மன்யான் மறப்பறியேன்” (குறள்) என்றாற் போல. வேறு தெய்வங்கள்பால் மதிப்பு வைப்பதில்லை என்பார், “மற்றை யோர் தெய்வ நேயமும் கொள்ளலேன்” என வுரைக்கின்றார். நேயம் - ஈண்டு நன்மதிப்புப் பொருளது; நேச மென்றோ அன்பென்றோ இதற்கு உரை கூறலாகாது; கூறின், வெறுப்பே னெனப் பொருள்பட்டு வள்ளற் பெருமான் சமரசக் கொள்கைக்கு மாறாம்; சிவநெறிக்குப் பொருந்தாததாம், “உள்ளேன் பிற தெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே” (சதக) என மணிவாசகர் கூறுவது காண்க.

     இதனால் நின் மலர்பாதமே யுள்ளுவேனே யன்றி வேறோர் தெய்வம் மனத்திற் கொள்ளே னெனக் கூறியவாறாம்.

     (3)