2654.

     வஞ்ச மாதர்ம யக்கம்க னவினும்
     எஞ்சு றாதிதற் கென்செய்கு வேன்என்றன்
     நெஞ்சம் அம்மயல் நீங்கிட வந்தெனைத்
     தஞ்சம் என்றுன்ச ரண்தந்து காக்கவே.

உரை:

      வஞ்சிக்கும் மகளிர் மேற் செல்லும் காம மயக்கம் நின்று கனவுக் காலத்தும் கெடாமல் வருத்துகின்றதாகலின், இதற்கு யான் என்ன செய்வேன்; என்னுடைய நெஞ்சத்திலிருந்து அம்மயக்கம் ஒழியுமாறு போந்து உனது திருவடியைத் தஞ்சமாகத் தந்து என்னைக் காத்தருள்வாயாக. எ.று.

      மனத்தி லொன்றும் வாயி லொன்றும் செய்கையி லொன்றுமாக நினைந்தும் பேசியும் செய்து மொழுகும் மகளிர்களை “வஞ்ச மாதர்” என்றும், அவர்பால் உளதாகும் காம வேட்கை மக்களை மயக்கும் இயல்பிற்றாதலின் “மாதர் மயக்க” மென்றும் கூறுகின்றார். காமமாவது, உடலாலும் உள்ளத்தாலும் வேறாகிய ஆண் பெண்ணினத்தை இனப் பெருக்கம் குறித்துப் புணர்த்தற்குப் படைப்போன் படைத்த சூழ்ச்சி. அறிவையும் மனத்தையும் மயக்கும் செயல் புரிதல் நோக்கி அதனைக் காம மயக்கம் என்றும், அளவின் மிக்கது குற்ற மென்றும் சான்றோர் வகுத்துள்ளனர். உயிர் உடம்பொடு தோன்று நாள் தொட்டு இறக்குங்காறும் நீங்காதிருத்தலின் அதனை “நோய்” என்று பெரியோர் கூறுப. காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக் கெடும் நோய்” (குறள்) என்பது காண்க. காமச் செவ்வி அரும்பி மலரும் பருவ முதல் உள்ளத்தில் இடம் பெற்று நனவிலும் கனவிலும் வேட்கையை எழுப்பி உயிரறிவை மயக்குதலின் “கனவினும் எஞ்சுறாது” எனவும், ஐம்புல வாசைகளையடக்கியொழுகும் தவச் செல்வர்களையும் அலைத்து வருத்தும் குற்றமாதலால், “இதற்கு என் செய்குவேன்” என்றும் இயம்புகிறார்; இறைவன் திருவருளாலன்றி மாறாத் தன்மையாதாதல் நோக்கிப் பரம் பொருளிடத்தே முறையிடுகின்றார். இதனைத் தமிழ்ச் சான்றோர், “முற்றவும் கடியலாகாக் குற்றம்” என்று உரைக்கின்றார்கள். காமம் நல்கும் இன்பத்தினும் துன்பம் பெரிதாதலை எண்ணி, “என் நெஞ்சம் அம்மயல் நீங்கிட” எனவும், சிவபரம் பொருளின் திருவடி ஞானவொளி அறிவிலும் மனத்திலும் பரவிய வழி மயக்கவிருள் யாவும் நீங்கி உய்தி பெறலா மென்னும் கருத்து விளங்க, “தஞ்ச மென்று உன் சரண் தந்து காக்க” என்றும் முறையிடுகின்றார். சரண் - திருவடி ஞானம்.

      இதனாற் காமக் குற்றத்தினின்றும் நீங்குதற்கும் உன் திருவடி நீழல் உய்தி தருவ தென்பதாம்.

     (4)