2656.

     மதியும் கல்வியும் வாய்மையும் வண்மையும்
     பதியும் ஈந்தெம்ப சுபதி மெய்ந்நெறிக்
     கதியின் வைப்பது நின்கடன் வன்கடல்
     வதியும் நஞ்சம்அ ணிமணி கண்டனே.

உரை:

      வலிய கடலிடத்துள்ள நஞ்சினைக் கழுத்திற் கொண்ட நீலமணி போலும் கண்டத்தையுடைய பெருமானே, பசுபதியே, மதியும் கல்வியும் வாய்மையும் வன்மையும் இடமும் அளித்து மெய்ந்நெறியின் முடிவாகிய சிவகதியில் எம்மை உய்ப்பது நினக்குக் கடனாகும். எ.று.

      வாசுகி நாகத்தைக் கயிறாகவும் வடவரையை மத்தாகவும் பெரிது முயன்று அரிது கடைய விடத்தைத் தந்தைமையின் “வன்கடல் வதியும் நஞ்சம்” என்றும், அதனை யுண்டொழிக்காமல் கழுத்தில் மணியணி போலக் கொண்டமையின், “நஞ்சம் அணிமணி கண்டனே” என்றும் புகழ்கின்றார். வதிதல் - தங்குதல். பசுபதி - சிவனுக்குரிய பெயர்களில் ஒன்று; பசுவாகிய ஆன்மாக்களுக்குத் தலைவன் என்பது பொருள். மதி-இயற்கையறிவு. “மதி நுட்பம் நூலோடுடையார்” (குறள்) என வருவதன் உரை காண்க. கல்வி - ஈண்டுக் கல்வியாற் பெறலாகும் செயற்கையறிவின் மேற்று. வாய்மை - "யாதொன்றும் தீமை யிலாத சொலல்” (குறள்) எனப்படுவது காண்க. வண்மை - வரையாது கொடுக்கும் பண்பு; வளமை என்றுமாம். பதி - வாழிடம். மெய்ந்நெறி - சிவநெறி “இலகு மெய்ந்நெறி சிவநெறி என்பது (ஞானசம்) என்பர் சேக்கிழார். சிவநெறி மேற்கொண்டார் பெறுவது சிவகதியாதலால் “மெய்ந்நெறிக் கதி” என்றும், நினது அருளாலன்றி யாரும் எய்தலாகாதது என்பாராய் “கதியின் உய்ப்பது நின் கடன்” என்றும் இசைக்கின்றார். கடனாகாத வழி, உடல் உலகுகளைப் படைத்து உயிர்களை வாழச் செய்வது பயனில் செயலாகும் என்பது குறிப்பு. “தன்கடன் அடியேனையும் தாங்குதல்” (கடம்பூர்) எனத் திருநாவுக்கரசர் உரைப்பதன் கருத்து இதுவாதலை எண்ணுக.

     இதனால், உலகளித்து வாழ்வித்த உனக்குச் சிவகதி தந்து வாழ்விப்பது கடன் எனக் கூறியவாறாம்.

     (6)