2657. நீடு வாழ்க்கை நெறிவரு துன்பினால்
வாடும் என்னைவ ருந்தல்என் றுன்பதம்
பாடும் வண்ணம்நற் பாங்கருள் வாய்மன்றுள்
ஆடும் முக்கண்அ ருட்பெரு வெள்ளமே.
உரை: சபையின்கண் ஆடல் புரிகின்ற முக்கண் மூர்த்தியாகிய திருவருள் பெருவெள்ளம் போன்ற சிவபெருமானே, நீண்ட வாழ்வில் மிக்குற்ற வருத்தம் தரும் துன்பங்களால் வாடுகின்ற என்னை, இனி வருந்துதல் ஒழிக என்று சொல்லி உனது திருவடியைப் புகழ்ந்து பாடும் நல்ல பாங்கினை எனக்கு அருளுதல் வேண்டும். எ.று.
மன்று- தில்லையிலுள்ள பொற் சபை. கூத்தற் பிரானது திருமேனி மூன்று கண்களை யுடையதாகலின், “மன்றுகளாடும் முக்கண்” என்றும், அத் திருமேனி, பெருகும் வெள்ளத் தளவினதாகிய திருவரு ளுருவாதல் விளங்க, “அருட் பெருவெள்ளமே” என்றும் கூறுகின்றார். வாழ்வு நீடுதலால் வினை பெருகித் துன்பம் விளைவிப்பது கண்டு, “நீடு வாழ்க்கை நெறிதரு துன்பினால் வாடுமென்னை” என வுரைக்கின்றார். நெறி தருதல்- மிகவும் பெருகுதல். நாள்தோறும் நினைவாலும் சொற்களாலும் செயல்களாலும் வினை பெருகித் துன்பம் செய்தலால், 'நெறிதரு துன்பு” எனத் தெரிவிக்கின்றார். துன்பம்- துன்பு என வந்தது; இன்பம் இன்பு என வருதல் போல. வருந்தல், வருந்தாதே; வியங்கோள் வினை. திருவடியைப் புகழ்ந்து பாடுவதன் கருத்து வினைத் துன்பத்தில் நீக்கம் குறித்ததாதலால், “வருந்தல் என்று உள்பதம் பாடும் வண்ணம்” என இசைக்கின்றார். பாங்கு - ஈண்டு மன நிலை சூழ் நிலையுமாம். அருள்வாய் - தருவாய். இதனால், வினை நீக்கம் முண்டாகப் பாடும் சூழ்நிலையை எனக்கு அமைத்துத் தருக என வேண்டியவாறாம். (7)
|