2658. சிந்தை நொந்திச்சி றியஅ டியனேன்
எந்தை என்றுனை எண்ணிநிற் கின்றனன்
இந்து சேகர னேஉன்றன் இன் அருள்
தந்து கரப்பதுன் தன்கடன் ஆகுமே
உரை: பிறைத் திங்களை முடியில் உடையவனே; சிறுமை யுற்ற அடியவனாகிய யான் மனநோயுற்று உன்னை எந்தையே என்று நினைந்து கொண்டிருக்கின்றேன், என்பால் இரக்கம் கொண்டு உனது இனிய திருவருளை யளித்து என்னைக் காப்பது உனக்குக் கடனாகும். எ.று.
இந்து - சந்திரன்; பிறைச் சந்திரனைக் குறிக்கிறது. “ஆவடுதண்டுறைத் தருணேந்து சேகரன் என்னுமே” (திருவிசைப்பா) எனச் சேந்தனார் பாடுவது காண்க. தருணம் - இளமை. தம்மை நோக்கிய வடலூர் வள்ளல் தமது சிறுமைப் பண்பைக் கண்டு வருந்துமாறு புலப்பட “இச்சிறய அடியனேன்” எனக் கூறுகின்றார். துன்பங்களின் மிகுதியால் மனம் நொந்தமை தோன்ற, “சிந்தை நொந்து” எனவும், நோயுற்ற மகன் அம்மா அப்பா என்பது போலச் சிவனை எந்தையே என்று எண்ணிப் புலம்பினமையின், “எந்தை யென்றுனை எண்ணி நிற்கின்றேன்” எனவும் உரைக்கின்றார். எந்தை ஈசம் எம்பெருமான் என்று சிந்தை செய்வர்க் கன்றித் திருவருள் கைகூறுவதன்று அரத்துறை) எனத் திருஞானசம்பந்தர் தெரிவிப்பது காண்க. பிறைத் திங்களின் தேய்வுத் துன்பங் கண்டு திருமுடியிற் சூடி ஆதரித்த வள்ளளாதலின், எனக்கு உன்னுடைய திருவருளை நல்குதல் முறையென முறையிடுவாராய்; “இந்து சேகரனே யுன்றன் இன்னருள் தந்து காப்பது உன்றன் கடன்” என வேண்டுகின்றார்.
இதனால் இந்து சேகரனாதலின், இன்னருள் தந்து காப்பது கடன் என வேண்டியவாறாம். (8)
|