2659. உன்னை நாடும்என் உள்ளம் பிறரிடைப்
பொன்னை நாடும்பு துமைஇ தென்கொலோ
மின்னை நாடும்நல் வேணிப்பி ரான்இங்கே
என்னை நாடிஎ னக்கருள் செய்கவே.
உரை: மின்னற் கொடி போல் ஒளி செய்யும் நல்ல சடையை யுடைய பெருமானே, உன்னையே விரும்பி யொழுகும் என்னுடைய மனம், உலகியற் பொன்னை நயந்து அதனை யுடைய பிறரிடம் சென்று கேட்க நினைப்பது எனக்குப் புதுமையாக வுளது; இங்கே நீ என்னை நாடி வந்து எனக்கு உன் திருவருளை நல்க வேண்டும். எ.று.
“பொலிந் திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்வீழ் சடை” (பொன்வண்ணத்) எனச் சேரமான் முதலியோர் கூறுதலால் “மின்னைநாடுமி நல்வேணிப் பிரான்” எனச் சிவனைப் பராவுகின்றார். பொன்னிறத் திருமேனியையுடைய உன்னையே நாளும் நயந்து நினைந்து கொண்டிருக்கும் எனது உள்ளம் உலகிற் பொருளுடைய பிறரிடம் பொன் பெறவிழைவது பொருத்த மாகாதே; அவ்வாறு பிறரிடம் அடைந்து பொன் பெற முயன்ற வரலாறே சிவத் தொண்டர்பாற் கிடையாது; என் மனம் நாடுவது நீ அருளாமையைக் காட்டி மருட்டுகின்றது என்பார், “உள்ளம் பிறரிடம் பொன்னை நாடும் புதுமை இது எக்கொலோ” என உரையாடுகின்றார். புதுமை, மருட்கைக்கு ஏது எனத் தொல்காப்பியர் (மெய்ப்) கூறுவது காண்க. இதனைப் போக்கி, என் மனம் திருந்த நீயே என்பால் வந்து நின் அருளைத் தருக என்பார், “என்னை நாடி எனக்கருள் செய்கவே” என்று இயம்புகிறார். வடலூர் வள்ளலார் புதுமை காண்பது போல மேலை நாட்டில் கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அருள் நெறியாளர் (Mystic Wtiter) ஆன்மப் பொருளை ஆராய்ந்து அதன்கண் உணர்வுகளே யன்றிப் பல தலையாய்ச் சிதறும் இயல்புகளும் (Distraction) உண்டென்றும், அவைகள் காற்றிற் பறக்கும் தூசிப் படலம் போல்வன. ஈக் கூட்டம் போல்வன தேள் கதுவப்பட்ட குரங்காட்டம் போல்வன என்றும் (The cloud of un knowing by Aldous Haxley) உரைக்கின்றார்கள்.
இதனால், என் மனம் உலகியற் பொருள்களை நாடா வண்ணம் என்னை நாடி வந்து அருள் தருக என வேண்டியவாறாம். (9)
|