2660.

     இழைபொ றுத்தமு லையவர்க் கேற்றஎன்
     பிழைபொ றுப்பதுன் பேர்அருட் கேதகும்
     மழைபொ றுக்கும்வ டிவுடை யோன்புகழ்
     தழைபொ றுக்கும்ச டைமுடித் தந்தையே.

உரை:

      மழை மேகத்தின் நிலத்தை யுடையவனாகிய திருமால் புகழ்ந்து பரவி யருச்சிக்கும் பச்சிலைகளையும் பூக்களையும் ஏற்றருளும் சடைபொருந்திய முடியையுடைய தந்தையாகிய சிவபெருமானே, சிறந்த நகைகளாகிய மணிமாலைகளைச் சுமக்கும் கொங்கைகளையுடைய மகளிரொடு கூடி யொழுகும் என்னுடைய குற்றங்களைப் பொறுப்பது மிக்க அருளுடைய உனக்குப் பொருத்தமாகும். எ.று.

      மழை பொறுக்கும் வடிவு, மழை பொழியும் கரிய மேகத்தின் நிறம் பொருந்திய திருமேனி. அஃது அருளாளனாகிய திருமாலுக்கு வடிவமாகலின், “மழை பொறுக்கும் வடிவுடையோன்” என வுரைக்கின்றார். தழை - பச்சிலை. பச்சிலைகளையும் பூக்களையும் கொண்டு தொண்டர் சிவனை அருச்சிப்பது மரபாதலின், “தழை பொறுக்கும் சடைமுடித் தந்தையே” எனவும், வாயாற் புகழ்களை யோதுவதும், கையால் தழை முதலியவற்றைச் சொரிதலும் வழிபாட்டு முறையாதல் பற்றி, புகழ் தழை பொறுக்கும் சடை” எனவும், கூறுகின்றார். திருவடியிலும் அடியவர் பூ முதலியவற்றை இடுவராயினும், சடை பொருந்திய முடியிலிடுவதும் பலரும் அறிய விளங்குதலின், சடை முடியை விதந்து கூறுகிறார். “பத்தியடியவர் பச்சிலை யிடினும், முத்தி கொடுத்து முன்னின் றருளி” (இடை. மருது மும்மணிக) என்று பட்டினத்துப் பிள்ளையார் உரைக்கின்றமை காண்க. இழை, பொன்னாலும் மணிகளாலும் முத்துக்களாலுமாகிய மாலை யணிகள் அணிகள் கிடந்து அசையும் மார்பையுடைய இளமகளிரை “இழை பொறுத்த முலையவல்” என்று மொழிகின்றார். இளமகளிரொடு கூடிச் செய்த குற்றங்களையும் நீ பொறுத்தருளுதல் வேண்டும்; மிக்குற்ற திருவருளுருவாகிய உனக்கு இயல்பாயினும், என் போன்றாரை அருளுதல் கடனாகும் என்பார், “உன் பேரருட்குத் தகும்” என்று முறையிடுகின்றார். தகுதி, முடியிற் கங்கையையும், இடப்பாகத்தில் உமைநயங்கையையும் உடைமை.

     இதனால், மகளிரொடு கூடிச் செய்த என் பிழைகளை மகளிரைப் பிரியாது உடன் கொண்டு திகழும் பெருமானாகிய உனக்குத் தக்கதேயாம் என உரைத்தவாறாம்.

     (10)