2661.

     மூட னேன்பிழை முற்றும் பொறுத்துனைப்
     பாட வேஅருட் பாங்கெனக் கீதியேல்
     நாட வேறும னையிடை நண்ணிநான்
     வாட வேண்டுவ தென்னைஎம் வள்ளலே.

உரை:

      அருள் வள்ளலாகிய சிவபெருமானே, மூடனாயினும் என் குற்றங்களைப் பொறுத்தாற்றி உன்னையே பாடிப் புகழ்தற்குரிய திருவருணலத்தை எனக்கு நல்குக; நல்குவாயாயின், வேற்றவர் வீடுகட்குச் சென்று அவர் ஒன்றும் ஈயாமை கண்டு வருந்துவது இல்லையாம். எ.று.

     மூடன், மலவிருளால் அறிவு மறைக்கப்பட்டவன்; எல்லா மக்களும் மலவிருள் மறைப்புக் குள்ளானவ ரெனினும், மறைப்புத் தன் சொற் செயல்களால் விளங்க நிற்றவனை மூடன் என வுலகம் வழங்குகிறது. பொருள் வேண்டி மான வுணர்வின்றிப் பிறருடைய வீடுகட்குச் செல்லும் செயலால் யான் ஓர் முடனாயினும், இரத்தலும் என் போன்றார்க்குத் தொழிலாதல் கண்டு என்னைப் பொறுத்தல் வேண்டும் என்பார், “பிழை முற்றும் பொறுத்து” என்றும், உன்னைப் பாடுதற் கேற்ற பாவன்மையே எனக்கு அருளுவாயாயின், பாட்டிசைக்குப் பாம்பும் இரங்குதலால் யான் வீடு தோறும் சென்று இரந்தலைய வேண்டாமை யுண்டாகும் என்பாராய், “பாடும் அருட் பாங்கு எனக் கீதியேல் நான் வேறு மனையிடை நண்ணி வாட வேண்டுவது என்னை” என்றும் இயம்புகின்றார். பிழைகளைப் பொறுப்பவர் சிலவற்றை விடுவித்துச் செய்வ தின்மையின், “முற்றும் பொறுத்து” எனவும், திருவரு ளில்லையாயின், கேட்டார்ப் பிணிக்கும் இனிய பாட்டுக்களைப் பாடலாக தென்றற்கு “அருட் பாங்கு எனக்கு ஈதியேல்” எனவும், சிறந்த திருவருளை இரத்தலின், “ஈதியேல்” எனவும், இனிய பாட்டிசைப்பாரைப் பிறர் நாடி வந்து மகிழ்த லுண்டே, யன்றி, அவர் பிறரை நாடி யிரந்து பெறாது வருந்துகின்ற தில்லையாதலால், “வேறு மனையிடை நான் நண்ணி வாட வேண்டுவ தென்னையாம்” எனவும், சொற்றொறும் நயம் தோன்றக் கூறுகின்றார். என்னை யென்பது இல்லை யென்னும் பொருள் தோன்ற நிற்கிறது; “கற்றதனா லாய பயன் என் கொல்”(குறள்) என்றாற் போல.

     இதனால், இனிய பாட்டுக்களைப் பாடி யுய்யும் அருட் பாங்கினை அருளுக என வேண்டியவாறாம்.

     (11)