2664.

     அன்றோர் பொருளாய் அடியேனை
          ஆட்கொண் டருளி அறிவளித்தாய்
     இன்றோ சிறியேன் பிழைகருதி
          இரங்கா தகற்ற எண்ணுதியோ
     குன்றோர் அனைய குறைசெயினும்
          கொண்டு குலம்பே சுதல்எந்தாய்
     நன்றோ கருணைப் பெருங்கடலே
          ஆளாய் இந்த நாயினையே.

உரை:

      பேரருட் கடலாகிய சிவபெருமானே, அந்த நாளில் அடியவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி ஆண்டருளி அறிவும் நல்கினாய்; இந்நாளில் சிறுமையுற்ற என் குற்றங்களை யெண்ணி இரக்கமின்றி என்னை நினைவிலிருந்து நீக்கக் கருதுகின்றாய் போலும்; மலையளவாய்க் குறைகள் இருந்தாலும், நாயனைய என்னை ஆண்டருள்க. ஏனெனில், கொண்ட பின் குலம் பேசுவது நற்செயலாகாது, காண்; எ.று.

     இறைவனது பேரருள் கடல் போல் அளப்பரிய பொருமையும் அகலமும் ஆழமுடைய தென்பது விளங்க, “கருணைப் பெருங்கடலே” என்று புகல்கின்றார். அந்நாள், கேவலத்து மலவிருளில் அறிவு செயலின்றிக் கிடந்த நாள். உலகுடல் கருவி கரணங்களைப் படைத்தளித்துச் சகலத்திற் புகுத்தி வாழச் செய்தது பற்றி, “ஓர் பொருளாய் அடியேனை ஆட்கொண்டு அருளி அறிவளித்தாய்” என வுரைக்கின்றார். அறிவு செயலற்ற நிலைமை கண்டு, அவை யினிது செயல்பட உலக வாழ்வு தந்தமையால், தான் அப்பெருமானுக்கு அடித்தொண்டு செய்யும் கடமை யுடையனாதலால், “அடியேன்” என்றும், வாழ்வளித்தமைக்குக் காரணம் பேரருளல்லது காரணம் வேறின்மை யுணர்ந்து, “ஒரு பொருளாய் ஆண்டருளினை” யென்றும் உரைக்கின்றார். அறிவன அறிந்து செய்வன செய்யுங்கால், பிழைகள் பல உண்டாகிவிடுகின்றன; அதனை யெண்ணி, என்னை மறுத்துப் புறத்தே ஒதுக்குகின்றாயே என வருந்துகின்றமையின், “இன்றோ சிறியேன் பிழை கருதி இரங்காது அகற்ற எண்ணுதியோ” எனக் கூறுகின்றார். இன்று, மண்ணில் வாழ்கின்ற இப்போது; திருவருளின் இருப்பையும் அது செய்யும் உதவியை மறந்து குற்றம் புரிந்து சிறுமை யுற்றமை தோன்றச் “சிறியேன்” எனவும், துன்பத்தால் தாக்கப்படுவதால், “இரங்கா தகற்ற எண்ணுதியோ” எனவும் இயம்புகின்றார். ஓகாரம், ஐயப் பொருட்டு. என் குற்றங்கள் மலைபோற் பெருகித் தோன்றுமாயினும் நினது திருவருட்கண்களுக்கு மிகவும் புல்லியவாகும்; ஒன்றைக் கொள்ளுதற்கு முன்பு அதன் குணநலங்களைத் தெரிந்து பின்பு கொள்வதுண்டே யன்றி கொண்ட பின் தெரிந்து பேசுவது நல்லறமன்று; உலகவரும் “கொண்டு குலம் பேசலாகாது” என மொழிகின்றார்கள். அதனால், “குன்றோ ரனைய குறை செயினும் கொண்டு குலம் பேசுதல் நன்றோ” என்று சொல்லுகின்றார். இறைவன் திருவுள்ளம் மாறாமை வேண்டி “எந்தாய்” என்றும், நீயு மென்னை ஆளாய்க் கொண்டருளினாய், நானும் ஆளாய் விட்டேன் என்பது வற்புறுத்தற்கு “ஆளாய் இந்த நாயினையே” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், என்னை ஆளாகக் கொள்ள ஆளாகிய என்னைக் கொண்டு குலம் பேசுதல் நன்றாகாது என விண்ணப்பித்தவாறாம்.

     (2)