2665. நாய்க்குங் கடையேன் பிழைஅனைத்தும்
நாடில் தவத்தால் நல்கியநல்
தாய்க்கும் கோபம் உறும்என்னில்
யாரே யென்பால் சலியாதார்
வாய்க்கும் கருணைக் கடல்உடையாய்
உன்பால் அடுத்தேன் வலிந்தெளிய
பேய்க்கும் தயவு புரிகின்றோய்
ஆள வேண்டும் பேதையையே.
உரை: தவறாமற் பயன் விளைவிக்கும் அருட் செல்வத்தாற் கடல் போன்ற பெருமானே, எளிமை மிக்க பேய்க்கும் வலியச் சென்று அருள் செய்பவன் நீ; யானோ நாயினும் கீழானவன்; என் பிழைகளை யெண்ணினால் தவம் செய்து பெற்ற தாய்க்கும் மனத்தின்கண் வெகுளி யுண்டாகுமென்றால், யாவர்தாம் என்னைப் பொறாமல் வெறாமல் இருப்பார்கள்; உன்னை யடுத்துப் பராவுகின்றேனாதலால் பேதையாகிய என்னை ஆண்டருளல் வேண்டும். எ.று.
செய்யும் அருள் ஒன்று பலவாய் நலம் பயப்ப தென்பதற்கு “வாய்க்கும் கருணை” எனச் சிறப்பிக்கின்றார். நாயின்பாற் காணப்படும் நன்றி யுணர்வும் தன்பால் இல்லை என்பார், “நாய்க்கும் கடையேன்” என்றும், குற்றமே காண்பவர் சிலரன்றிப் பலரன்மையின், “பிழை யனைத்தும் நாடின்” என்றும், நெடுநாள் மகப் பேறின்றித் தவம் செய்து பெற்ற தாய் தன் மகன்பால் அன்புருவாய் நின்று அவன் யாது பிழை செய்யினும் பாரா தொழிகுவள் என்பாராய், “தவத்தால் நல்கி நல் தாய்க்கும் பிழை யனைத்தும் நாடின் கோபம் உறும்” என்றும் உரைக்கின்றார். நாடின் என்பது நாடுதலில்லாமை தோன்ற நின்றது. அவள் கொள்ளாளாயினும், கோபம் பொங்கித் தானே மிக்கு வெளிப்படும் என்றற்குக் “கோபம் உறும்” எனக் கூறுகிறார். பெற்ற தாய்க்கும் கோபம் பெரிதாம் எனில் மற்றவர் சிறிதும் பொறுக்க மாட்டார்கள் என்பாராய், “யாரே என்பாற் சலியாதார்” என விளம்புகிறார். ஆதலாற்றான் கருணைக் கடலாகிய உன்னை யடைந்து வேண்டுகிறேன் என்பார், “உன்பால் அடுத்தேன்” என வுரைக்கின்றார். திருவடி நீழலன்றி வேறு யாதும் வேண்டாத காரைக்காற் பேயாரை நினைப்பிப்பாராய், “எளிய பேய்க்கும் வலியத் தயவு புரிகின்றோய்” எனக் கிளந்து கூறுகிறார்.
இதனால், பெற்ற தாயும் பொறாத பெருங்குற்ற முடைமை கூறி அருள் புரிக என விண்ணப்பித்தவாறாம். (3)
|