2666.

     பேதைப் பருவத் தெனைவலியப்
          பிடித்தாட் கொண்ட பெருமானே
     போதைக் கழிப்பான் வீண்புரியும்
          புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்
     வாதைப் படும்என் உயிரைஉன்றன்
          மலர்த்தாள் முன்னர் மடிவித்தே
     ஓதைக் கடல் சூழ் உலகத்தே
          பழிசூழ் விப்பேன் உரைத்தேனே.

உரை:

      மிக்க இளம் பருவத்திலேயே வலிய வந்து என்னுணர்வைப்பற்றிக் கொண்ட பெருமானே, பொழுதைப்போக்கு முகத்தால் வீண் படுத்திய புலையனாகிய என்னுடைய குற்றங்களைப் பொறுத்தாற்றி அருள் புரியவில்லையென்றால், அவற்றால் இப்போது துன்பப்படும் எனது உயிரை உனது மலர் போன்ற திருவடி முன்பு சாகப்பண்ணி, முழக்கத்தையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகில் உனக்குப் பழியுண்டாக்குவேன்; முன் கூட்டியே உரைக்கின்றேன். எ.று.

     பேதைப் பருவம் - முதல் ஏழு வயது வரையுள்ள பருவம்; அறியாப்பருவம் என்பதுமுண்டு. அறிவறியாப் பருவத்திலேயே தமக்குச் சிவன்பால் பற்று உண்டானமை தெரிவிப்பாராய், “பேதைப் பருவத் தெனை வலியப் பிடித்து ஆட்கொண்ட பெருமானே” எனக் கூறுகின்றார். இது சிவபரம்பொருள்; இதனை வழிபடுக எனப் பிறர் அறிவியாமலே தமக்குப் பற்றுண்டானதற்குக் காரணம் காண்பவர், சிவனே பற்று உண்டாக்கியிருத்தல் வேண்டுமென நினைக்கின்றாராகலின், வலியப் பிடித்து ஆட்கொண்ட பெருமானே” என வுரைக்கின்றார். பொழுது - போது என வந்தது. பயனுள்ள வேலையின்றி வெறிதே வீண் பொழுது போக்கினமையின், “போதைக் கழிப்பான் வீண்புரியும் புலையேன்” என்று தெரிவிக்கின்றார். வீண் - பயனில்லாமை. காலத்தை வீண் போக்குவது, காலக் கொலையாதலின், அது செய்யும் தம்மைப் “புலையேன்” என்கின்றார். பிழை - குற்றம்; தீய செய்தல். அறியாப் பருவத்தில் வலிய ஆட்கொள்ளப்பட்ட வுரிமையால் யான் செய்பிழை பொறுத்தற்கு உரியவாகும் என்பார், “புலையேன் பிழையைப் பொறுக்கிலையேல்” என்று புகல்கின்றார். வாதை - துன்பம். பிழை வினைகளின் பயனாகத் தாக்குண்டு வருந்துவதை, “வாதைப்படும் என்னுயிரை” எனவும், அவ்வாதையினின்று நீங்குதற்கு வாயில் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கருதுதலால், “என்னுயிரை மடிவித்து” எனவும், இத் தற்கொலையை யுன் திருமுன்பு செய்து கொள்வேன் என்றற்கு, “உன்றன் மலர்த்தாள் முன்னர் மடிவித்து” எனவும், அதனால் உனக்குப் பழி வருவிப்பேன் என்பார், “உலகத்தே பழி சூழ்விப்பேன்” எனவும் இயம்புகின்றார். கடலின் முழக்கை யுடையதாயினும், உலகில் என் செயலால் உண்டாகும் பழிப்புரை பெரிதாம் என்றற்கு “ஓதைக் கடல் சூழ் உலகம்” என்று உரைக்கின்றார். அத்தகையபடி எய்தாமற் காத்துக்கொள்க என்பாராய், “உரைத்தேனே” என்கின்றார். ஓதை - ஓசை; முழக்கம். இவ்வாறே மணிவாசகப் பெருமான் சிவன் திருமுன்னர் நின்று, “விடுதி கண்டாய்; விடின் வேலை நஞ்சுண் மழைதரு கண்டன் குணமிலி மானிடன் தேய் மதியன், பழைதரு மாபரன் என்றென் றறைவன் பழிப்பினையே” (நீத்தல்) என்பது காண்க.

      இதனால், குற்றம் பொறுத்தருளா யெனின் திருமுன் உயிர் கொடுத்துப் பழி வருவிப்பேன் என முறையிட்டவாறாம்.

     (4)