2667. உரைத்தார் சிலர்சின் னாள்கழிய
உறுவேம் என்ன உரைத்தவரே
நரைத்தார் இறந்தார் அவர்தம்மை
நான்கண் டிருந்தும் நாணாமே
விரைத்தாள் மலரைப் பெறலாம்என்
றெண்ணி வீணே இளைக்கின்றேன்
திரைத்தாழ் கடலிற் பெரும்பிழையே
செய்தேன் என்ன செய்வேனே.
உரை: சிலர் சிலநாள் கழிந்தால் திருவருளைப் பெறலாமென வுரைத்தனர்; உரைத்த அவர்கள் நாள் கழியக் கழிய, மூத்து நரைத்து இறந்தொழிந்தார்கள்; நான் அவர்களைக் கண்டிருந்தும் நாணம் சிறிதுமின்றி உன்னுடைய தெய்வ மணம் கமழும் திருவடியாகிய மலர்களை யடையலாம் என நினைந்து, வீணாக உடம்பும் உள்ளமும் மெலிகின்றேன்; அலையெழுந்து வீழ்கின்ற கடலளவாய குற்றங்களைச் செய்துளேனாகலின், யான் என்ன செய்வேன். எ.று.
இன்று இல்லையாயினும் சிலநாள் கழியுமாயின் திருவடி ஞானத்தை எய்தலாம் என எனக்குச் சிலர் சொல்லித் தேற்றினர் என்பாராய், “உரைத்தார் சிலர் சின்னாள் கழிய உறுவேம் என்ன” என்றும், உரைத்த அறிஞர் பலரும் என் கண் காண மூத்துத் தளர்ந்து இறந்து மறைந்தனர்
என்பார், “உரைத்தவரே நரைத்தார் இறந்தார்” என்றும் கூறுகின்றார். சொன்ன அர்களையும், அவர்கள் மூத்து நரைத்து இறந்ததையும் நான் நேரிற் கண்டிருந்தேன்; திருவடி ஞானம் எய்தவில்லை; அதனை நம்பியிருந்த நானும் அவ்வுரை பொய்த்தமைக்குச் சிறிதும் நாணினேனில்லை என்பாராய், “அவர் தம்மை நான் கண்டிருந்தும் நாணாமே” என நவில்கின்றார். நம் எண்ணமும் பொய்த்துப் போகலாம் என்று நினையாமல், திருவடி ஞானம் தெய்வ மணம் கமழ்ந்து கொண்டு எய்தப் பெறலாம் என்று நினைந்து, பற்பல நாட்களை வீண் போக்கிக் கெட்டேன் என்று சொல்லுவாராய், “விரைத்தாள் மலரைப் பெறலாம் என்று எண்ணி வீணே இளைக்கின்றேன்” என்று கூறுகின்றார். தாம் செய்த பிழை கடலினும் பெரிதாய் நீந்தலரிது எனற்குத் “திரைத்தாழ் கடல்” உவமம் செய்யப்படுகிறது. தமது மாட்டாமை தோன்ற “என்ன செய்வேன்” என இரங்குகிறார்.
இதனால், பிழை மிகுதியால் திருவடிப் பேறு சின்னாள் கழியின் எய்தலா மென நம்பி ஏமாந்து செயலற்றமை தெரிவித்தவாறாம். (5)
|