2668. செய்வேன் தீமை நலம்ஒன்றும்
தெரியேன் தெரிந்து தெளிந்தோரை
வைவேன் அன்றி வாழ்ந்தேன்என்
வண்ணம் இந்த வண்ணம்எனில்
உய்வேன் என்ப தெவ்வாறென்
உடையாய் உய்வேன் உய்வித்தால்
நைவேன் அலதிங் கென்செய்வேன்
அந்தோ எண்ணி நலிவேனே.
உரை: என்னையுடைய பெருமானே, தீயவை எல்லாவற்றையும் செய்பவனும், நல்லது சிறிதும் தெரியாதவனும், யாவையும் தெளியத் தெரிந்த பெரியோர்களை வைது பேசுவதன்றி, வாழ்த்தத் தெரியாதவனும் யானே யாவன்; என்னுடைய குணமும் செயலும் இதுவாகும்; இந்நிலையில் யான் உய்தி பெறுவே னென்பது எவ்வாறு? நீ உய்வித்தாலன்றி யான் உய்தி பெறேனாதலால், வீணே மெலிவ தல்லது வேறே என்ன செய்வேன்; ஐயோ, இவற்றை எண்ணி வருந்துகிறேன். எ.று.
எல்லாம் உடையவனும் எல்லாம் அறிந்தவனும் இறைவனாகிய நீயாதலால், உன்பால் முறையிட்டுக் கொள்வதன்றி வேறு வகையொன்றும் இல்லாதவன் என்பாராய், “என் உடையாய்” எனச் சிவனைப் போற்றுகின்றார். துன்பத்தால் வருந்தும் மனமுடையார் அறிவுக் கண்ணுக்குத் தாம் செய்த தீச் செயல்களும் நினைவுகளுமே புலனாகுமாதலால், “தீமை செய்வேன், நலமொன்றும் தெரியேன்” என்றும், தெளிவுடைய நல்லோர்களை அவமதித்து இகழ்வதன்றி, மதித்துப் பேணுவதன்றி வாழ்த்தி மகிழ்வது கிடையாது என்றற்குத் “தெரிந்து தெளிந்தோரை வைவேனன்றி வாழ்த்தேன்” என்றும், எல்லா மறிந்த பரம்பொருளாகிய உன்பால் பலசொல்லுவது என்னாம் என்பாராய், “என் வண்ணம் இந்த வண்ணம்” என்றும் உரைக்கின்றார். “குலம் பொல்லேன் குணம் பொல்லேன்
குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன், கோலமாய நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி யல்லேன் நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்று விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன் வெறுப்பனவும் மிகப் பெரிதும் பேச வல்லேன், இலம் பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே” (தனி-தாண்ட) எனத் திருநாவுக்கரசர் முறையிடுவது காண்க. இத்தகைய பண்பும் தொழிலுமுடைய யான் அருள் ஞானம் பெற்று உன் அடி யடைந்து. உய்வே னென்றற்கு ஏது சிறிதும் இல்லை என்பாராய், “உய்வேன் என்பது எவ்வாறு” எனக் கேட்கின்றார். இனி, என் மன மொழி செயல்களை உன்பால் வைத்து நினைப்பித்தால் நினைவதும், மொழிவித்தால் மொழிவதும், செய்வித்தால் செய்வதும் தவிர என்னால் செய்யலாவது ஒன்றுமில்லை என்றற்கு, “உய்வித்தால் உய்வேன் நைவேனல்லது இங்கு என் செய்வேன்” என்றும், இவ்வடைக் கலத்தை முன்பே செய்யாமல் பன்னாளை வீண் போக்கினோமே என எண்ணி வருந்துகின்றே னென்பாராய், “அந்தோ எண்ணி நலிவேனே” என்றும் சொல்லிப் புலம்புகிறார்.
இதனால், செய்த குற்றம் நினைந்து எடுத்துரைத்து உய்தி நல்குக எனச் சிவன்பால் முறையிட்டவாறாம். (6)
|