2669.

     எண்ணி நலிவேன் நின்பாதம்
          எந்நாள் அடைவோம் எனஎன்பால்
     நண்ணி நலிவைத் தவிராயேல்
          என்செய் திடுவேன் நாயகனே
     கண்ணி நலியப் படும்பறவைக்
          கால்போல் மனக்கால் கட்டுண்ணப்
     பண்ணி நலஞ்சேர் திருக்கூட்டம்
          புகுத எனினும் பரிந்தருளே.

உரை:

      தலைவனே, நின் திருவடியை அடையும் நாள் எந்த நாள் என நினைந்து, வருந்துகின்றேன்; எனது வருத்தத்தை என்பாற் போந்து போக்கா விடின், என்னால் யாது செய்ய முடியும்; வலை பிணிப்பதால் நோயுறும் ஒரு பறவையின் கால்களைப் போல, என் மனமாகிய காலைப் பிணித்து, நற்பண்பமைந்த நின்னுடைய அடியாரது திருக்கூட்டத்திற் புகுவிப்பது திருக்குறிப்பாயினும் எனக்கு அதனை அன்புடன் அருளுக. எ.று.

     நினது திருவடி ஞானம் பெறுவது எப்போ தென நாளும் நினைந்து நினைந்து மனநலிவுற்று வருந்துகிறேன் என்பாராய், “நின் பாதம் எப்போதடைவோம் என எண்ணி நலிவேன்” என உரைக்கின்றார். திருவடி ஞானம், “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்” (ஞானசம்.) எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது காண்க. திருவடிப் பேறு எய்துவது எப்போது என்ற நினைவு பன்னாளும் நினைந்துருகுவார்க்கு உளதாவதாகலின், வடலூர் வள்ளலார் திருவடியையே பெரிதும் நாடியிருக்கின்றமை தெரிகிறது. அதனை இடங் கண்டு சென்றடையும் இயல்பு மண்ணவர்க்கு இல்லையாகலின், சிவன் தானே வந்து காட்டியருளல் வேண்டுமாதலின், “என்பால் நண்ணித் தவிராயேல்” எனவும், தனது மாட்டாமை விளங்க, “என் செய்திடுவேன்” எனவும் கூறுகின்றார். கண்ணி - பறவை வேட்டுவன் பரப்பும் வலை. உண்மையறியாமல் பறவைகள் உட்காருமிடத்து அவற்றின் கால்கள் சிக்கிப் பிணிப்புண்பது பற்றிக் “கண்ணி நலியப்படும் பறவைக் கால் போல்” எனக் காட்டுகின்றார். மனக்கால் - மனநினைவு. மனக்காலைக் கட்டுதலாவது - ஈண்டு மனத்தை ஒருமைப்படுத்தல். மனமாகிய கரணமும் நினைத்தல் முதலிய செயலைச் செய்வது திருவரு ளாணையாதலால், மனத்தை ஒருமைப்படுத்துவதையும் நீயே செய்தல் வேண்டும் என்பார், “கட்டுண்ணப்பண்ணி” என்றும், திருவடி ஞானத்தை எய்துவித்து மனத்தின்கண் நிலைபெற வைப்பது அடியவர் திருக்கூட்ட மாதலின், “நலம்சேர் திருக்கூட்டம் புகுத வெனினும் புரிந்தருள்” என்றும் புகன்றுரைக்கின்றார். திருவடிப் பேறு எய்துவிக்கும் இயல்புடைமை கண்டே “நலஞ்சேர் திருக்கூட்டம்” எனச் சிறப்பிக்கின்றார். பரிதல் - அன்பு செய்தல்; பரிந்து பேசுகின்றான் என்பது போல.

     இதனால், மன நலிவைப் போக்கி, அடியார் திருக்கூட்டத்திற் சேர்த்தருள்க என வேண்டியவாறாம்.

     (7)