2670. பரியும் மனத்தால் கருணைநடம்
பரவுந் தொண்டர் பதப்பணியே
புரியும் இனத்தா ரொடுங்கூடிப்
புனித னாக வேண்டும்எனத்
திரியும் அடிமைச் சிறியேனுக்
கிரங்கா திருந்தால் சின்னாட்பின்
எரியுங் கொடுவாய் நரகத்துக்
கென்செய் வேன்என் செய்வனே.
உரை: நினது அருட் டிருக்கூத்தைக் கண்டு, அன்பு புரியும் மனத்துடன் போற்றித் துதிக்கும் தொண்டர்களின் திருவடிக்குப் பணி செய்யும் அடியார் கூட்டத்தோடு கூடித் தூயனாக வேண்டுமென்று அலையும் அடிமைச் செயலுடைய சிறியவனாகிய எனக்கு, அருளாமலிருப்பாயேல், சின்னாட்களில் எரி கக்குகின்ற கொடிய இடமாகிய நரகம் புக வேண்டி வருமே, இதற்கு என்ன செய்வேன். எ.று.
சிவபெருமானது கூத்தாடும் கோலத்தில் ஐந்தொழிற் குறிப்புக்கள் உள்ளனவெனச் சான்றோர் கூறுதலால், அதனைக் “கருணை நடம்” எனக் கூறுகின்றார். அன்புள்ளத்துடன் பணிந்தேத்தும் சிவத்தொண்டர்களைப் “பரியும் மனத்தால் கருணை நடம் பரவும் தொண்டர்” எனப் பாராட்டுகின்றார். அப்பெருமக்களைச் சிவ மென்றே கருதி வழிபடுவதும், சிவப்பணியாம் எனப் பெரியோர் அறிவுறுத்தலால், “தொண்டர் பதப் பணி” என்று உரைக்கின்றார். “மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே” (சிவ. ஞா. போ) என மெய்கண்டார் அறிவுறுப்பது காண்க. தொண்டர் பதப்பணி செய்யும் அடியவர் கூட்டம் சிவ நினைவும் திருவடித் தொண்டும் கொண்டுள்ளதால் அதனைச் சேர்ந்தவரும் அவற்றையே செய்து வினை மாசு நீங்கித் தூயராய்ச் சிவபோகத்துக் குரியராதலால், “பதப் பணியே புரியும் இனத்தாரொடுங் கூடிப் புனிதனாக வேண்டுமெனத் திரியும் அடிமை” எனத் தம்மைக் குறிக்கின்றார். விண்டொழிந்தன நம்முடை வல்வினை. . . . . வலஞ்சுழி யிடமாகக் கொண்ட நாதன் மெய்த்தொழில் புரிதொண்டரோடு இனிதிருந்தமையாலே” (வலஞ்) எனத் திருஞானசம்பந்தர் உரைப்பது காண்க. பதப்பணி - திருவடி வழிபாடு. மெய்த்தொண்டரைக் கண்டு பரவுவது எளிய செயலன்மையின், “திரியும் அடிமைச் சிறியேன்” எனவும், அதனைச் சிறிதே புரிகின்றமை தோன்றச் “சிறியேன்” எனவும், புரிதற்கேற்ற வாய்ப்பு எய்தாவிடின் பாவவிருள் சூழ்ந்து கொடிய நரகத்தில் வீழ்த்து மென அஞ்சுகின்றாராகலின், “இரங்கா திருந்தால் சின்னாட்பின் எரியும் கொடுவாய் நரகத்துக் கென்செய்வேன் என்செய்வேனே” எனவும் இயம்புகின்றார். வாழ்வு நெடுநாள் நிலவுவ தன்மை பற்றி, “சின்னாள்” என்றும், நரகத்தின் கொடுமை காட்டற்கு “எரியும் கொடுவாய் நரகம்” என்றும், விலக்கருமை நினைந்து “என் செய்வேன் என் செய்வேன்” என்றும் உரைக்கின்றார்.
இதனால் தொண்டரொடு கூடித் தொண்டாற்றுவது சிவ போகத்துக்குரிய மனத் தூய்மையைச் செய்யுமென விளம்பியவாறாம். (8)
|