2671. என்செய் திடுவேன் புலைநாயேன்
இயற்றும் பிழைகள் எல்லாம்நின்
பொன்செய் மலர்த்தாள் துணைஅந்தோ
பொறுத்துக் கருணை புரியாதேல்
புன்செய் விளவிப் பயனிலியாய்ப்
புறத்திற் கிடத்தி எனஅடியார்
வன்செய் உரையில் சிரிப்பார்மற்
றதுகண் டெங்ஙன் வாழ்வேனே.
உரை: புலைத் தன்மையையுடைய நாயின் இயல்பினேனாகிய யான் செய்யும் பிழைகள், எல்லாவற்றையும் நினது அழகிய தாமரை மலர் போன்ற திருவடிகள் பொறுத்தாற்றி அருள் செய்யாவிடின், புன்செய் நிலத்தை யுழுது பயனின்றிக் கெட்ட உழவனைப் புறத்தே நில்லென ஒதுக்குவது போல, வன்சொற்களைப் பேசி நின்னடியார்கள் என்னை இகழ்ந்து நகைப்பார்களாயின், அது கண்டு நான் எவ்வாறு வாழ்வேன்; என்ன செய்வேன். எ.று.
புலைநாய் - புலைத்தன்மை பொருந்திய நாய். புலை இயல்புடைய நாய் புலைப் பொருளை யுண்டு புலைநாறிக் கண்டாரால் வெறுக்கப்படுவது போலும் நிலையிலுள்ளவனாதலின், என் செயல் பலவும் குற்றமே யுடையவையாம் என்பது கருத்து. வேறு எவராலும் பொறுக்கப் படாதவையாதலின் திருவருளே அதனைச் செய்தல் வேண்டு மென்பார், “மலர்த்தாள் துணை பொறுத்துக் கருணை புரியாதேல்” எனப் புகல்கின்றார். பொன் - அழகு; நிறமுமாம். தாள் துணை - இரண்டாகிய திருவடி. இறைவன் செயலை அவன் திருவடி மேல் ஏற்றிக் கூறுவதால், “தாள் பொறுத்துக் கருணை புரியாதேல்” என்று கூறுகிறார். திருவருளைக் கருணை என்கிறார். பொறுத்தற் குரியதும் பொறுப்பதுமாகிய திருவடி பொறுத்துக் கொள்ளாமல் ஒழியாது; பொறாதாயின் என்ற நினைவு தோன்றியதும் உள்ளம் கலக்கமுற்றுத் துன்பத்தால் துடிக்கின்றமை புலப்பட “அந்தோ” எனக் கதறுகின்றார். அருட் செல்வர்களாகிய அடியவர்களால் புறக்கணித்து ஒதுக்கப்படுவோமே என்று அஞ்சுகிறார். புறக்கணிக்கப்படும் நிலைமையை மனக்கண்ணால் நோக்குபவர், “புன் செய் விளைவிப் பயனிலியாய்” எனப் பகர்கின்றார். விளவுதல், உழுதல். இக் கருத்தையே, “பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்கு (குலாப்) என மணிவாசகர் கூறுவது காண்க. விளாவுதல் விளா எனவும் வழங்கும். “நுகமின்றி விளாக் கைத்து” (அதிசயம்) என்று திருவாசகம் ஓதுவது காண்க. வன்செய்யுரை - வன்சொற் சொல்லுதல்; கேட்டார் மனம் புண்படும் சொல்லாம். மென்மையான மனமுடையவனாதலால், அவர் சொற்களைக் கேட்கவும் சிரிப்பைக் காணவும் பொறாமல் இறந்து படுவேன் என்பார், “வன் செய் யுரையில் சிரிப்பார்மற் றெங்ஙன் வாழ்வேன்” என்று வருந்துகிறார்.
இதனால், நீ அருளாயாயின் அடியார் இகழ்ந்து சிரிப்பர்; அது காணப் பொறாது இறந்துபடுவே னென விண்ணப்பித்தவாறாம். (9)
|