2672. வாழா மனத்தின் வழிசென்று
வாளா நாளைக் கழிக்கின்ற
பாழாம் உலகச் சிறுநடையில்
பாவி யேனைப் பதிவித்தாய்
ஊழாம் எனில்எம் பெருமானே
இன்னும் வினையால் ஓதிஅனையேன்
ஏழாம் நரகுக் காளாவேன்
அல்லால் புகல்என் எளியேற்கே.
உரை: எம்பெருமானே, நெறிக்கண் நின்று வாழ்தலில்லாத மனத்தின் வழிச் சென்று வீணிற் கழிக்கின்ற, பாழ்த்த உலகியற் சிறுநடை யுடைய, மண்ணுலகில் வாழ்ந் தொழியுமாறு என்னை நிறுத்தி விட்டாய்; இதற்குக் காரணம் எனது ஊழ்வினையாயின், இன்னமும் பெருகவிருக்கும் வினைகளால் எளியனாகிய யான் ஏழாம் நரகுக்கு ஆளாவதல்லது ஒதி மரம் போன்ற எனக்கு வேறு புகலிடம் இல்லையாம். எ.று.
அற நெறிக்கண் நின்று வாழாமை கண்டு “வாழா மனம்” எனக் கூறுகின்றார். “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே” (சதக) என்பது திருவாசகம். மனம் போன போக்கில் நாட்கள் பயன்படாமல் வினை பெருகுதற்கே இடமாமாறு உலகியல் வாழ்வு கொண்டு செலுத்துவதை நினைந்து, “மனத்தின் வழிச் சென்று வாளா நாளைக் கழிக்கின்ற பாழாம் உலகச் சிறுநடை” என வுரைக்கின்றார். நன்னெறி பற்றி வாழ மாட்டாத மனம் தான் இயலும் வழிச் செல்ல உலகியல் நடையும் இன்ப நெறி நோக்காமல் துன்ப நிலைக்கே உய்ப்பது பற்றிப் “பாழாம் உலக நடை” எனவும், வற்றா இன்பப் பெருமை நல்காமல் சிறுமையே எய்துவிக்கும் இயல்புபற்றிச் “சிறு நடை” யெனவும் சிறப்பிக்கின்றார். மனத்தை நெறிக்கண் ணிறுத்தும் வன்மை யின்றி, உலக நடையின் சிறுமை நோக்காமல் வினைகளையே ஈட்டுவதால் தம்மைப் “பாவியேன்” என்றும், பிறப் பிறப்புக்களைச் செய்து உலகிலே உழலுவதாக எண்ணிப் “பதிவித்தாய்” என மொழிகின்றார். பதிவித்தல் - நிலைப்பித்தல். இதற்குக் காரணம் முன்னமே செய்யப் பெற்றுப் பயன் ஊழ்த்து நிற்கும், வினை என அறிவு நூல் தெரிவித்தலின், “ஊழாம் எனில்” எனவும், ஊழ்வினையையும், வினை செய்தே நுகர வேண்டுமாதலால் வினையே பெருக்கி நரகம் புகும் நிலைமைய னாவேனேயன்றி வேறு கதியில்லை யாகுமே என வருந்துகின்றமை தோன்ற, “இன்னும் வினையால் ஏழாம் நரகுக் காளாவேனல்லால் புகல் என்” எனச் சொல்லுகின்றார். ஏழாம் நரகம், ஆபாசம், பாதாளம், நிதலம், கபத்திமான், மாதலம், இராசாங்கம், பாதலம் என்பனவாம். ஒதியனையேன் - உள்ளீடு வலியில்லாத ஒதி மரம் போல்பவன்.
இதனால் ஊழ்வினையும் வினை பெருக்கி நுகரப்படுவதாய் நரகத்துக்கு உய்ப்ப தென முறையிட்டவாறாம். (10)
|