2673.

     எளியேன் கருணைத் திருநடஞ்செய்
          இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
     களியேன் கருங்கற் பாறைஎனக்
          கிடக்கின் றேன்இக் கடையேனை
     அளியே பெருக ஆளுதியோ
          ஆள்கி லாயோ யாதொன்றும்
     தெளியேன் அந்தோ அந்தோஎன்
          செய்வேன் விலங்கிற் சிறியேனே.

உரை:

      பெருமானே, எளியவனாகிய யான் திருவருட் கூத்தினைப் புரியும் மலர் போலும் உன்னுடைய இரண்டாகிய திருவடிகளைக் கண்டு, மனமெல்லாம் மகிழ்வதின்றிக் கருங் கற்பாறை போல் உலகிற் கிடக்கின் றேனாதலால், கடைப்பட்ட எனக்கு அருள்நலம் மிகுமாறு என்னை ஆள்வாயோ, மாட்டாயோ, ஒன்றும் தெளிவாகத் தெரியாமல், விலங்கினும் அறிவிற் சிறியனாதலால்யான். யாது செய்வேன். எ.று

      எளியேன் - எளிமைப் பண்புடைய யான். அருள் நெறிக்கூத்து எனற்குக் “கருணைத் திருநடம்” எனக் கூறுகின்றார். மண்ணுலக வாழ்வின் நற்பயன் இறைவன் திருநடம் கண்டு இன்புறுவ தென்பவாகலின், “திருநடம்செய் இணைத்தாள் மலர் கண்டு இதயமெலாம் களியேன்” என்று சொல்லுகின்றார். இதயம் - மனம். களித்தல் - இன்புறுதல். “எடுத்த பொற்பாதம் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” (திருவிருத்தம். கோயில்) என்பது காண்க. “தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப்பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று பணிந்தார்” (தடுத். 107) என்பதும் காண்க. உணர்வும் இளகும் பண்பும் இல்லாமையில் “கருங்கற் பாறையெனக் கிடக்கின்றே” னெனவும், அதனால் மக்களிற் கடையாயினவ னாயினே என்றற்குக் “கடையேன்” எனவும் இயம்புகிறார். அளி, அருள் நலம். அருள் செய்து ஆளப்படாவிடில் எய்தும் துன்பத்தை நினைந்து வருந்துகின்றாராதலால் “அந்தோ அந்தோ என்செய்வேன்” எனப் புலம்புகின்றார்.

      இதனால் திருநடம் கண்டு களிக்கும் பேறு பெற என்னை ஆண்டருள்க என முறையிட்டவாறாம். பாறை போற் கிடப்பது அபராதம்.

     (1)