2674.

     சிறியேன் பிழையைத் திருஉளத்தே
          தேர்ந்திங் கென்னைச் சீறுதியோ
     எறியேம் எனக்கொண் டிருங்குதியோ
          இவ்வா றவ்வா றெனஒன்றும்
     அறியேன் அவலக் கடல்அழுந்தி
          அந்தோ அழுங்கி அயர்கின்றேன்
     பிறியேன் என்னைப் பிரிக்கினும்பின்
          துணையும் காணேன் பெருமானே.

உரை:

      சிவபெருமானே, சிறுமை யுடையவனாகிய என்னுடைய பிழைகளை மனத்திற் கொண்டு, ஆராய்ந்து என்னை வெறுக்கின்றாயோ; விலக்குதல் கூடா தென இரக்கம் கொள்கின்றாயோ; இப்படி அப்படி என்றும் ஒன்றும் விளங்காதவனாய் வருத்தமாகிய கடலில் மூழ்கி, ஐயோ, பெரிதும் அழுங்கித் துயர்கின்றேன்; எனினும் உன்னைவிட்டு நீங்க மாட்டேன்; நீக்கினாலும் போக மாட்டேன்; வேறு துணை யாவரும் எனக்கில்லை. எ.று.

     பிழைகளை யெடுத் துரைக்கின்றாராதலால், அவற்றிற் கேதுவாகிய சிறுமைக் குணஞ் செயல்களையுடையவன் என்றற்குச் “சிறியேன்” என்று தம்மைக் குறிக்கின்றார். பிழை மிகுதி கண்டு மனத்தால் ஆராய்ந்து இவன் கொள்ளத் தகாதவனெனத் துணிந்து சினமுற்று வெறுத்து ஒதுக்கிவிட நினைக்கிறாயோ, அல்லது பொறுக்கத் தக்கவையென்று கொண்டு என்னை அடியவனாகக் கொண்டருள எண்ணுகின்றாயோ என நினைந்து, “பிழையைத் திருவுளத்தே தேர்ந்து என்னைச் சீறுதியோ எறியேம் எனக் கொண்டு இரங்குதியோ” என்றும், ஒருதலையாகத் துணிந்து கொள்ள மாட்டாமை புலப்பட “இவ்வாறு அவ்வாறு ஒன்றும் அறியேன்” என்றும் சொல்லுகிறார். இவ்வாறு, குணங்கள் இத்தன்மை பனவாதலால் கொள்ளத் தக்கவன்; அவ்வாறு, அல்லாதவன். எறிதல் - விலக்குதல், ஒருதலையாகத் தெளிய மாட்டாமையால் நெஞ்சு கலங்கியலமருமாறு விளங்க, “அவலக் கடல் அழுங்கி” யெனவும், இதனால் மனம் புண்ணுற்று மெலிவது புலப்பட, “அந்தோ அழுங்கி யயர்கின்றேன்” எனவுமுரைக்கின்றார். அடிமையாகுக எனக்கொள்ளாமல் நீக்கினும் யான் நீங்க மாட்டேன் என்பார், “பிறியேன் என்னைப் பிரிக்கினும்” என்றும், பிரிக்கப் பிரிவது முறையாயினும், வேறு துணையில்லாமை காரணம் என்றற்குப் “பின் துணையும் காணேன்” என்றும் கூறுகின்றார். எதுகை நோக்கி இடையினம் வல்லினமாயிற்று. அவலக் கடல் - துன்பமாகிய கடல் “அவலக் கடலாய வெள்ளம்” என்பது திருவாசகம். அழுங்குதல் - வருந்துதல்.

     இதனால், பிழை நோக்கி என்னை வெறுத்து நோக்கிப் புறம் போகத்தள்ளினும் போக மாட்டே னென விண்ணப்பித்தவாறாம்.

     (12)