2675.

     காணேன் நினது திருஅருளைக்
          கண்டார் தமது கழல்தலைமேல்
     பூணேன் உலகச் சிறுநடையில்
          போந்து பொய்யே புகன்றந்தோ
     வீணே சுழன்று மெலிகின்றேன்
          என்னே இன்னல் மிகச்சுமக்கும்
     தூணே எனஇங் கெனைவிதித்தாய்
          எந்தாய் யாது சூழ்வேனே.

உரை:

      எந்தையே, நின்னுடைய திருவருள் கைவரப் பெற்ற பெருமக்களைக் கண்டிலேனாதலால் அவர்களுடைய திருவடிகளை என் தலை கொள்ளுமாறு வணங்கிற்றில்லேன்; உலகியல் வாழ்வாகிய சிற்றொழுக்கத்திற் புகுந்து பொய்களையே மொழிந்து வீணேயலைந்து மெலிகின்றேன்; துன்பச் சுமைகளைத் தாங்கும் தூண் போலாக என்னை இவ்வுலகில் இருப்பித்தாய்; இதனை என்னென்பது? எதனை நினைப்பேன். எ.று.

     திருவருளைக் காண்பதென்பது, திருவருளை நிறையப் பெற்ற பெருமக்களைக் கண்டு இன்புறுவதாகும்; அவர்களை இதுவரையும் தேடிக் கண்டிலேன் என்பார், “நினது திருவருளைக் கண்டார்” எனவுரைக்கின்றார். திருவருள் ஞானிகளைக் கண்டாலும் இப்பெற்றிய ரெனத் தெளியாமல், அவர் திருவடிகளைத் தலையால் வணங்கி வழிபடா தொழிந்தேன் என்பாராய், “கண்டார் தமது கழல் தலைமேற் பூணேன்” என்று கூறுகின்றார். கழல் - திருவடி; ஆகு பெயர். சிறுநடை - சிறுமை பயக்கும் பொய்யொழுக்கம். உலகில் வயிறு வளர்த்தலொன்றையே குறியாகக் கொண்டொழுகும் திறமும் “உலகச் சிறுநடை” எனப்படும். சிறுநடை - சிற்றொழுக்கம். சிறுமை இன்னதென்பது விளங்குதற் கென்றே, “பொய்யே புகன்று வீணே சுழன்று மெலிகின்றேன்” என விளிம்புகிறார். சுழலுதல் - அலைந்து வருந்துதல். வாழ்வில் துன்பமே நிறைந்திருத்தலால், “இன்னல் மிகச் சுமக்கும் தூணே” எனத் தம்மை நினைக்கின்றார். இத்தகையதோர் நிலை உளதானமையை யெண்ணி வியந்து, “என்னே” எனவும், துன்பம் உழத்தல் வேண்டுமெனக் கருதியே என்னைப் படைத்து இருக்கச் செய்கின்றாய் போலும் என மனநோய் உறுகின்றது தோன்ற, “எனை விதித்தாய்” எனவும், இத் துன்பத்தினின்றும் உய்தற்கு வேறே வழியறிய மாட்டேனாயினேன்” என்றற்கு “யாது சூழ்வேன்” எனவும் உரைக்கின்றார். சூழ்தல் - எண்ணுதல்.

     இதனால், உலக வாழ்வில் துன்பம் சுமக்கும் தூணாக நிற்பதல்லது உய்தி காண்பவனாக என்னைக் கருத முடியவில்லை எனத் தெரிவித்தவாறாம்.

     (13)