2676.

     சூழ்வேன் நினது கருணைநடம்
          சூழம் பெரியார் தமைச்சூழ்ந்து
     வாழ்வேன் எளியேன் குறிப்பிந்த
          வண்ணம் எனது மனக்குரங்கோ
     தாழ்வேன் நினையும் தாழ்விப்பேன்
          அவலக் கடலில் சலியாமே
     வீழ்வேன் என்றால் எம்பெருமான்
          இதற்கென் செய்கேன் வினையேனே.

உரை:

      எங்கள் பெருமானே, நின்னுடைய அருட் கூத்தையே நினைப்பவனாகிய யான், அத்திருக்கூத்தையே நினைந்தொழுகும் பெரியோர் கூட்டத்தையே சார்ந்து வாழ்வேன்; எளியனாகிய யான் கருதுமாறே என் மனக்குரங்கு நினைந் தொழுகுவதை விடுத்து, என்னைத் தாழ்விப்பதையே நினைத்துக் கொண்டு, “உன்னைத் துன்பக் கடலில் மூழ்குவிப்பதோடு சலிப்புறாமல் யானும் அதனுள் வீழ்ந்தொழிவேன்” என்று சொல்லுமாயின், இதற்கு யான் என்ன செய்வேன், அருள் புரிக. எ.று.

      எடுத்த எடுப்பில் தமது உட்கோளைக் கூறலறும் வடலூர் வள்ளல், யான் நின்னுடைய திருவருட் கூத்தையே நினைந்தொழுகும் செயலுடையவன் என்பார், “சூழ்வேன் நினது கருணைநடம்” என்றும், இவ்வாறே நினையும் பெரியோர்களின் திருக்கூட்டத்தையே சேர்ந்து இருப்பவன் என்பார், “சூழும் பெரியார்தமைச் சூழ்ந்து வாழ்வேன்” என்றும் உரைக்கின்றார். சூழ்தல் - நினைத்தல். ஆன்மாக்கள் மலவிருளிலிருந்து நீங்குதற் பொருட்டு ஞான சபையில் திருக்கூத்து நிகழ்கின்ற நலம் பற்றி அதனைக் “கருணைநடம்” எனக் குறிக்கின்றார். “மாயை தனையுதறி வல்வினையைச் சுட்டு மலம் சாய வமுக்கியருள் தானெடுத்து - நேயத்தால், ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல், தான் எந்தையார் பரதம்தான்” (உண். விளக்) எனத் திருவதிகை மனவாசகம் கடந்தார் உரைப்பது காண்க. தம்மைப் போலவே இறைவன் திருக்கூத்தை நினைந்து பராவுவோர் தமக்கு இனமாதலின், அவர் கூட்டத்தையே சார்ந்தொழுகுவது முறையாதல் விளங்க, “சூழும் பெரியோர்தமைச் சூழ்ந்து வாழ்வேன்” என இசைக்கின்றார். எனினும், யான் மனத்தை யடக்கி யாளும் வலியில்லேன் என்பாராய் “எளியேன்” எனக் கூறுகிறார். குரங்கின் இயல்புடையதாதலால் மனத்தை “மனக்குரங்கு” என்கிறார். அவ்வியல்பினால், கீழ்மையுறுவிக்கும் எண்ணங்களையே கொண்டு கீழ்மைப்படுவேன்; என்னைப் போலவே நின்னையும் கீழ்மையுறுவிப்பேன் என வுரைக்கின்ற தென்பார், “தாழ்வேன்; நினையும் தாழ்விப்பேன்” என்று கூறுவதுடன், கீழ்மைச் செயல் துன்பத்தில் ஆழ்த்துமே யெனின் கேளாமல், அதற்குச் சலிப்புறாமல் துன்பக் கடலில் வீழ்வே னெனப் பிடிவாதம் செய்கிறதென்பாராய், “சலியாமே அவலக் கடலில் வீழ்வேன் என்றால்” எனக் கூறுகின்றார். எளிமைத் தன்மையால் மனக்குரங்கை அடக்க வியலாதயான் என்செய்வேன் எனக் கையறவு படுமாறு விளங்க, “இதற்கு என் செய்வேன்” எனவும், முன்னை வினைப்பயன் என்னை எளிமையனாக்கிவிட்ட தென்பார், “வினையேன்” எனவும் இயம்புகின்றார்.

     இதனால், திருவருட் கூத்தை யான் நயப்பேனாயினும் மனம் என் வழி நிற்காமைக்கு என்ன செய்வேன் என முறையிட்டவாறாம்.

     (14)