2680.

     கடந்தாழ் கயம்போல் செருக்கிமயற்
          கடலில் அழுத்திக் கடுவினையேன்
     மடந்தாழ் மனததோ டுலைகின்றேன்
          கரைகண் டேறும் வகைஅறியேன்
     தொடர்ந்தார் எடுப்பார் எனையெடுக்கும்
          துணைநின் மலர்த்தாள் துணைகண்டாய்
     அடர்ந்தார் தமக்கும் அருள்கின்றோய்
          ஆணை ஆணை அடியேனே.

உரை:

      பகைத்து மேல் வந்தோர்க்கு அருள் புரிகின்ற பரமசிவனே மதம் பொழியும் யானை போற் செருக்கி மயக்கமாகிய கடலில் ஆழ்ந்து வருந்தும் தீவினையையுடைய யான், அறியாமை நிறைந்த மனத்துடன் வருந்துகின்றேன்; துன்பக் கடலிலிருந்து கரையேறும் துறையாறியாமல் உள்ளேன்; என்னைப் பின் தொடர்ந்து வந்து கரையேற்றுவர் யாவருளர்; நின்னுடைய இரண்டாகிய மலர் போன்ற திருவடிகளே எனக்குத் துணையாகும். எ.று.

     கடம் - மதம். கயம் - யானை. தாம் எய்தி வருந்தும் துன்பத்துக்குக் காரணம், செருக்கு, வெகுளி முதலிய குற்றங்களால் உண்டாகும் தீவினைகள் என்பாராய், “செருக்கி மயற் கடலில் அழுந்து இக்கடுவினையேன்” எனக் கூறுகின்றார். அழுந்து - அழுத்தென வலித்தது. இக் கடுவினையேன் என்ற சுட்டு, தம்மையே குறிக்கிறது. கடுவினை - மிக்கத் தீவினை. செருக்கினை மதம் என்பதும் உண்டு. செருக்கு முதலிய குற்றங்களைத் திருவள்ளுவர், செருக்கு - சினம், சிறுமை, இவறல், மானம், உவகை (431 - 2) என்பர். செருக்கு ஒன்றையே கூறினாராயினும் இனம் பற்றி ஏனையவும் எடுத்துக் கொள்ளப்பட்டன. எல்லாத் தீவினைகட்கும் இவை காரணமாதலால், செருக்கி மயற் கடலில் அழுந்தும் இக்கொடியேன் என்று தம்மை எடுத்துரைக்கின்றார். இக்குற்றங்கள் மேற்படும்போது அறிவு மயங்கி வினை வகைகளில் தோய்ந்து தம்மை மறந்து கரை காணாத் துன்பத்தில் ஆகும் திறத்தை விளக்குதற்குக் “கடம்தாழ் கயம் போல்” என்றும், “மடம்தாழ் மனத்தோடு உலை கின்றேனென்றும் கூறுகின்றார். உலைதல் - வருந்துதல். மயக்கத்தைக் கடல் என்றமையால், தெளிந்து நலம் பெறும் நிலையைக் கரையேறுதலாக வுரைக்க லுற்றுக் “கரையேறும் வகையறியேன்” என இசைக்கின்றார். என்பால் அன்பு கொண்டு என் பின்னே போந்து எடுத்தாள்பவர் எவரும் இல்லை; என்னைப் போல் துன்பத்தில் ஆழ்கின்றார்கள். என்றற்காகத் “தொடர்ந்து ஆர் எடுப்பார்” என இன்மை விளங்க இயம்புகிறார். துன்பக் கடலில் வீழ்ந்தார்க்குத் துணை புரிந்து உய்விப்பது உன் திருவடிகளாகிய தெப்ப மல்லது வேறில்லை என்பாராய், “துணை நின் மலர்த்தாள் துணை கண்டாய்” எனச் சொல்லுகின்றார். துணை இரண்டனுள் முன்னது தெப்பம்; பின்னது இரண்டு என்று கொள்க.

      இதனால் தீவினையால் துன்புறும் எனக்கு உன் திருவடிகளே துணை செய்வன என முறையிட்டவாறாம்.

     (18)