2681. அடியார் இன்பம் அடைக்கின்றார்
அடியேன் ஒருவன் அயர்கின்றேன்
படியார் பலரும் பலபேசிச்
சிரியா நின்றார் பரந்திரவும்
விடியா நின்ற தென்புரிவேன்
இன்னுங் கருணை விளைத்திலையே
கொடியார் பிழையும் குணமாகக்
கொண்டு மகிழும் குணக்குன்றே.
உரை: கொடுமைப் பண்புடையார் செய்யும் குற்றங்களையும் குணமாகக் கொண்டருளும் குணமே யுருவாகிய குன்றம் போல்பவனே, உனக்கு அடியாராயினார் பலரும் இன்பம் நுகர்கின்றார்களாக, அடியவனான நான் ஒருவன் துன்பத்தால் வருந்துகிறேன்; நிலத்தவர் பலரும் பலவற்றைச் சொல்லி, நிலமெங்கும் பரவலாக நின்று, நகைக்கின்றார்கள்; இரவு முற்றும் இவற்றைக் கேட்குமாற்றால் எனக்குப் பொழுது விடிகிறது; நீ இன்னும் எனக்குக் கருணை செய்கிறா யில்லை; யான் யாது செய்வேன். எ.று.
அடியார் - சிவன் திருவடிகளைச் சிந்தையிலே எப்போதும் நினைந்து கொண்டிருப்பவர். யானும் நின் திருவடிகளை நினைக்கும் அடியனாயினும், நான் ஒருவனே துன்பத்திற் கிடந்து வருந்துகின்றேன் என்பாராய், “அடியார் இன்பம் அடைகின்றார்; அடியேன் ஒருவன் அயர்கின்றேன்” என வுரைக்கின்றார். யான் ஒருவன் எனவே, இன்புறும் அடியார் பலராம் - படியார். நிலவுலகத்து மக்கள். நான் இன்பமின்றிச் சோர்வது கண்டு, உலகினர் பலரும் ஆங்காங்கே பரந்து நின்று தம் மனத்தில் தோன்றியவற்றைப் பேசி, எள்ளி நகைக்கின்றார்கள் என்பாராய், “படியார் பலரும் பரந்து பல பேசிச் சிரியா நின்றார்” எனக் கூறுகிறார். பகற் போதில் பலரும் தத்தம் தொழில் மேற் செல்லுதலால், சிலரே பேசுகின்றாரென்றாலும், இரவுப் போதில் எல்லோரும் பேசி நகைக்கின்றார்கள். யான் அவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே உறக்க மின்றி இரவைக் கழிக்கின்றேன் என்பார், “இரவும் விடியா நின்றது” எனக் குறைபடுகின்றார். ஒளி நிறைந்த பகற்கு இருள் திணிந்த இரவு மாறுபடினும் நாட் கூறு எனக் கருதி வெறுக்கப்படாதவாறு போல, துன்ப வியல்பினதாகிய குற்றத்தையும் குணக் கூறாகக் கொண்டு ஆள்கின்றாய்; யான் அவ்வாறின்றி வருந்துகிறேன் எனக் கூற “கொடியார் பிழையும் குணமாகக் கொண்டு மகிழும் குணக்குன்று” என்று போற்றி யுரைக்கின்றார். கொடுமைப் பண்பும் கோடிய செய்கையும் உடையவர், கொடியர். நல்லோர் குற்றங்களைக் குணமாகக் கொள்வது நினது இயல்பாயினும். தீயவர் குற்றங்களையும் குணமாகக் கொள்கின்றாய்; என்பால் அதனைச் செய்கின்றா யில்லையே என வருந்துகின்றாராதலால், கொடியார் பிழையும் எனக் கிளந்து மொழிகின்றார்; “இன்னும் கருணை விளைத்திலையே” என விளம்புகின்றார். விளைத்திலை, செயலால் இன்பம் தருகின்றாயில்லை. இந்நிலையில் யான் செய்வது ஒன்றும் இல்லை எனற்கு “என் புரிவேன்” என இயம்புகின்றார். புரிதல் - ஈண்டுச் செய்தற் பொருளது. “எவரும் மத்த மனத்தொடு மாலிவன் என்ன மனநினைவில் ஒத்தன ஒத்தன சொல்லிடவும், ஊரூர் திரிந்து எவரும் தத்தம் மனத்தன பேசவும், உடையான் அடியே நினைந்துருகி யான் சாவது எஞ்ஞான்று கொல்” (சதக) என்றும் பொருள்பட மணிவாசகர் உரைப்பது இங்கு நினைவில் தோன்றுவது காண்க. (19)
|