2682.

     குன்றா நிலைநின் றருள்அடைந்தார்
          அன்பர் எல்லாம் கொடியேன்நான்
     நன்றாம் நெறிசென் றறியாதே
          மனஞ்செல் வழியே நடக்கிறேன்
     பொன்றா மணியே அவர்க்கருளி
          என்னை விடுத்தல் புகன்றே
     என்றால் எனக்கே நகைதோன்றும்
          எந்தாய் உளத்துக் கொன்னாமே.

உரை:

      கெடாத மாணிக்க மணி போன்ற சிவபரம் பொருளே, எந்தையே, குறையாத ஒழுக்க நெறியில் நின்று அன்பர் பலரும் உன் திருவருளைப் பெற்றார்கள்; கோடிய நெறிமேற்கொண்ட யான், நன்னெறிக்கண் செல்லாமல் மனம் போன நெறியிற் செல்கின்றேன்; அன்பரான ஞானிகட்குத் திருவருளைச் செய்து என்னைப் புறக்கணித்து விட்டது; அது நினக்குப் புகழாகாது என்பேனாயின், அப்படிச் சொல்வது எனக்கே சிரிப்பை யுண்டு பண்ணுகிற தெனின், உன் திருவுளத்துக்கு எப்படியிருக்கும். எ.று.

     பொன்றுதல் - கெடுதல். மணி - சிவந்த மாணிக்க மணி. நிறத்தாலும் ஒளியாலும் சிவன் திருமேனி மாணிக்க மணி போன்றதாயினும், நிலத்து மாணிக்கம் கெடும் இயல்பினதாகலின் அதனை விலக்கற்குப் “பொன்றாமணி” என்று புகல்கின்றார். அன்பு நெறி நின்று உயர்ந்த சிவபோகம் பெறும் நிலையைக் “குன்றா நிலை” எனக் குறிக்கின்றார். மேன்மே லுயர்வதன்றிக் குறைவ தில்லாமையால் சிவப் பேற்றைப் பெற்ற பெருமக்களை, “குன்றா நிலை நின்றார்” எனப் புகழ்ந்துரைக்கின்றார். “எல்லையில்லாப் புண்ணியம் தோன்றி மேன்மேல் வளர்வது” (கண்ணப்) என்று சேக்கிழார் உரைப்பர். அருள் - சிவஞானம் நல்கும் சிவபோகம். அன்பு நெறிக்கண் நின்றார் பெறுவ தென வலியுறுத்தற்கு “அன்ப ரெல்லாம்” என்கின்றார். “அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே” (திருமந்தி) எனப் பெரியோர் உரைப்பது காண்க. கொடியேன் - நேர்மை யின்றிக் கோடிய நெறியிற் செல்லும் யான். கொடியவர்க்கு அமைவது அன்பும் அறமும் இல்லாத தீ நெறியாதலால், அதனை மேற் கொள்ளாமை விளங்க, “நன்றாம் நெறி சென்று அறியாது” என்றும், அத் தீ நெறி இன்னது என்றற்கு “மனஞ் செல்வழி” என்றும் இயம்புகின்றார். அன்புடைய ஞானிகட்குச் செய்த சிவஞானத் திருவருளை எனக்குச் செய்யாதொழிதல் உனக்குப் புகழாகாது; என் போன்றார்க்குச் செய்வது புகழைக் கொடுக்கும் என்று சொல்லுவேனாயின், அச்சொல் முழுத்த பேதைமையைக் காட்டுதலின், “அவர்க் கருளி என்னை விடுத்தல் புகழன்று என்றால் எனக்கே நகை தோன்றும்” என்று கூறுகின்றார். பேதைமை பொருளாக நகை தோன்றும் என்பர் தொல்காப்பியர். எனது இப்பேதைமைச் சொல், உன் திருவுளத்தில் வெறுப்பை விளைக்குமோ என்று அஞ்சுகிறேன் என்பாராய், “எந்தாய் உளத்துக்கு என்னாமோ” எனப் புகன்றுரைக்கின்றார்.

      இதனால், மேற்கொண்டிருக்கும் கொடுமை நெறியை நினையாமல், நன்னெறி நின்றார் பெறும் நலம் கண்டு பொறாது, நகை மொழி பேசுகிறேன் என விண்ணப்பித்தவாறாம்.

     (20)