2683. என்ஆ ருயிருக் குயிர்அனையாய்
என்னைப் பொருளாய் எண்ணி மகிழிந்
தந்நாள் அடிமை கொண்டளித்தாய்
யார்க்கோ வந்த விருந்தெனவே
இந்நாள் இரங்கா திருக்கின்றாய்
எங்கே புகுவேன் என்புரிவேன்
நின்னால் அன்றிப் பிறர்தம்மால்
வேண்டேன் என்றும் நின்மலனே.
உரை: நின்மலனே, என் அரிய வுயிர்க்கு உயிர் போன்றவனே, அன்று என்னை அருட் பேற்றுக் குரியவனாகக் கருதி மனமகிழ்ச்சியுடன் என்னை ஆட்கொண் டருளினாயாயினும், இக் காலத்தில் யார்க்கோ வந்த விருந்தினன் போல எண்ணி என்பால் இரக்கங் காட்டி அருள்கின்றாயில்லை; யான் அருட் கொடை வேண்டி வேறே யாவரிடம் செல்வேன்; என்ன செய்வேன்; பிறரிடத்தே கிடைக்குமாயின் நின்னிடத்தே பெறலாவ தொன்றை யன்றி விரும்பேன், காண். எ.று.
தான் மலவிருளோடு கூடியதனால் மறைப்புண்டிருத்தல் பற்றி, இயல்பிலேயே அம்மலத் தொடர்பு இல்லாமை விளங்கச் சிவபரம் பொருளை “நின்மலனே” என்று போற்றுகிறார். உயிர்க்குள் உணர்வுருவாய்க் கலந்து நின்று உணர்த்தும் திருவருட் செயலினனாதலால், “உயிர்க் குயிரனையாய்” என்று பரவுகின்றார். உணர்வால் நிறைந்த உயிர்ப் பேறு எளிதில் பெறற் கரிதாகலின், “என் ஆருயிர்” எனச் சிறப்பிக்கின்றார். மலவிருளில் அழுந்திச் செயலற்றுக் கிடந்த மருட்கேவல நிலையை “அந்நாள்” எனவும், எண்ணிறந்தவற்றுள் ஒன்றாய்க் கிடந்த எனதுயிரைத் தேர்ந்து உலகுடல் கருவி கரணங்களிற் சேர்த்தமைக்குக் காரணம் யாதென்று ஆராய்ந்து, தன்னை ஒரு பொருளாக இறைவன் திருவுள்ளத்திற் கொண்டு தனது இன்னருள் செய்தருளினான் எனத் தெளிந்தமை புலப்பட, “என்னைப் பொருளாக யெண்ணி மகிழ்ந்து” எனவும் இயம்புகிறார். இருளில் கிடப்பார்க்கு ஒளி விளக்குப் போல உலகுடல் முதலியன ஒளியாய் உதவுதலின், “அடிமை கொண்டு” என்றும், மயங்குமிடத்து உணர்வு தருதலால் “அளித்தாய்” என்றும் இசைக்கின்றார். இந்நாள் என்றது சகலாவத்தையில் இருக்கும் கருவி கரணங்களுடன் கலந்திருக்கும் காலம். மலம் விளைவிக்கும் மறப்பு, மறைப்புகளால் தடுமாறுகின்ற பொழுது துன்புற விட்டு அருள் நல்கக் காலந் தாழ்க்கின்றமையால், “யார்க்கோ வந்த விருந்தெனவே இரங்காதிருக்கின்றாய்” என்று கூறுகின்றார். யார்க்கோ வந்த விருந்தென விருத்தலாவது நமக்கென்ன வென்று பராமுகமாக விருத்தல். விருந்து-புதியராய் வருபவர்; புதியராய் வந்த ஒருவர் கருதிய இடம் பொருள் அறியாது அலமுறுவது கண்டும் என்னெனக் கேளாதும் உதவாதும் வாளா விருத்தல் போல எனது உணர்வு தடுமாற்றம் அறிந்தும் மயங்குவதறிந்தும் அருள் ஞானம் நல்கா திருக்கின்றாய் என்பது குறிப்பு.
உண்மை உணர்வு தந்து நன்னெறிக்கண் உய்ப்பது நின் திருவடியன்றி வேறில்லை என்றற்கு “எங்கே புகுவேன்” எனவும், நின்னருளால் அன்றிச் செய்வகை யாதுமில்லை யன்றோ என்பாராய், “என் புரிவேன் எனவும் இசைக்கின்றார். வேறு பிற தெய்வங்கள் அருளத் தகுவன உளவெனினும் நீ நல்கும் திருவருளே யன்றிப் பிறவற்றின்பால் பரவிப் பெறலாகா தென்றும் துணிவினேன் என்பதும் திருவுள்ளம் அறிந்தது என்று பகர லுற்று, “நின்னாலன்றிப் பிறர் தம்மால் வேண்டேன் ஒன்றும்” என்று அறுதியிட்டுரைக்கின்றார்.
இதனால் பராமுகமாக இருந்தருளாது என்னுட்கோளை மதித்து அருளொளி நல்குக என இறைஞ்சியவாறாம். (21)
|