2687. எல்லாம் தெரிந்த இறைவாநின் தண்ணருள் எய்துகிலாப்
பொல்லாத பாவிப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்வாய்
கல்லா மனக்கடை யாலே கடைவைத்துக் கண்டதுதுன்
பல்லால் அணுத்துணை யும்அறி யேன்இன்பம் ஆவதுவே.
உரை: முற்றறிவுடைய முதல்வனே, நினது தண்ணிய திருவருளைப் பெற்றிலாமையாற் பாவம் நிறைந்த புலைத்தன்மை யுடைய யான் செய்துள்ள பிழைகளைப் பொறுத்து அருள் செய்ய வேண்டும்; ஏனெனில், அருட் கல்வியை நாடாத மனத்தால் உளதாய கீழ்மையால் பல செய்து கண்டது துன்பமல்லது அணுவளவேனும் இன்பமில்லையாதலால். எ.று.
எல்லாவற்றையும் எஞ்சாமல் அறிவும் பேரறிவுருவினனாதல் கொண்டு, “எல்லாம் தெரிந்த இறைவா” என வுரைக்கின்றார். இறைவன்- எங்கும் தங்குபவன். அணுப் புதைக்கவும் இடமின்றி எவ்விடத்தும் எப்பொருளினும் தங்குபவனாதலால் “எல்லாம் தெரிந்த இறைவா” எனல் பொருத்தமாகிறது. நினது திருவருள் ஞானம் இல்லாமையாற் பொல்லாங்கு செய்து பாவம் மிகுந்து புலைத்தன்மை யுள்ளவனானேன் என்பாராய், “நின் தண்ணருள் எய்துகிலாப் பொல்லாத பாவிப் புலையேன்” என்று புகல்கின்றார். இக் குறைபாட்டால் செய்வன அனைத்தும் குற்றமாய் முடிதலால், ஒறுப்பதால் பயனின்மை கண்டு என்னைப் பொறுத்து, இல்லாத திருவருளை வழங்குதல் வேண்டும் எனக் கேட்பாராய், “பிழையைப் பொறுத்தருள்வாய்” என்று சொல்லுகிறார். தன்பாற் பாவமும் புலைத்தன்மையும் இரு தலைக் கண்டறிந்தமை விளம்பலுற்று. “கடை வைத்துக் கண்டது துன்பல்லால் அணுத்துணையும் அறியேன் இன்பமாவது” என இசைக்கின்றார். கடை வைத்தலாவது பலரறியப் பலவேறு சொல்லும் செயலும் புரிந்தொழுகுதல். இதற்குக் காரணம் இவற்றை யியப்பிக்கும் மனத்தின் கீழ்மைத் தன்மை என்று குறித்தற்குக் கல்லா மனக் கடையாலே” எனக் கூறுகின்றார். இன்பம் பயக்கும் பண்புடைய நினைவுகளை நினைக்கப் பழகாத மனம், “கல்லா மனம்” என்க. “கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேன்” (அம்மானை) என்பது திருவாசகம். “வைத்தொரு கல்வி மனப் பழக்கம்” என ஒளவையார் அறிவுறுத்துவர். நற்பழக்க மில்லாமையால் மன நினைவு கெட, அதனால் இயங்கும் சொல்லும் செயலும் பிழைபடத் துன்பமே விளைந்தது என்பாராய், “கல்லா மனக்கடையாலே கடை வைத்து கண்டது துன்பல்லால் அணுத்துணையும் அறியேன் இன்பமாவது” என வருந்துகிறார். துன்பம் - துன்பு என நின்றது.
இதனால் தமது பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் என்றற்குக் காரணம் விளக்கியவாறாம். (3)
|