2688. மண்ணுடை யாரியை வாளா மனஞ்செல வைத்ததலால்
எண்ணுடை யாரிடை எய்திநின் தாண்மலர் ஏத்துகிலேன்
புண்ணுடை யாரிற் புலம்புகின் றேனைப் பொறுத்தருள்முக்
கண்ணுடைய யாய்கழற் காலுடை யாய்மணி கண்டத்தனே.
உரை: மூன்றாகிய கண்களையுடைய பெருமானே, கழலணிந்த திருவடியை யுடையவனே, நீல மணியின் நிறமும் ஒளியுமுடைய கழுத்தை யுடையவனே, நில புலங்களையுடைய செல்வர்பால் வெறிதே போவதற்கு என் மனத்தைச் செலுத்தியதுண்டே யன்றி, நின்னுடைய திருவடியை எண்ணுகிற பெரியோர் பக்கல் அடைந்து அத் திருவடியை நினைந்து பராவுதலொழிந்தேன்; அப்பிழையை எண்ணிப் புண்பட்டவர் போலத் துயரப்படுகின்றேன்; என் பிழையைப் பொறுத்தருள வேண்டும். எ.று.
ஞாயிறு, திங்கள், தீ என்ற மூன்றுக்கும் முழுமுதலாவான் இறைவனென பராதலால், “முக்கண்ணுடையாய்” எனவும், ஆன்மாக்களின் வினைப் பிணிப்பைக் கழற்றி வீடு பேறு நல்கும் வீறுடைய தென்பதுபற்றிக் “கழற் காலுடையாய்” எனவும், உலகுயிர்கள் உய்தற் பொருட்டு நஞ்சுண்டருளிய அருட் குறிப்பைப் புலப்படுத்தலின், “மணிகண்டத்தனே” எனவும் சிவபிரானைப் புகழ்கின்றார். “சோதி முழு முதலாய் நின்றான்” (முதுகுன்) என்றும், “கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த அழலார் ஒளியன காண்க ஐயாற னடித்தலமே” (ஐயா) எனவும், “வேலையுள் நஞ்சம் விருப்பாக உண்ணவனைத் தேவர்க் கமுதீந்து எவ்வுலகிற்கும் கண்ணவனை” (கண்ணார்) எனவும் சான்றோர் எடுத்துரைப்பது காண்க. மிக்கு விரிந்த நிலபுலங்களையுடைய வேளாண் செல்வர்களை “மண்ணுடையார்” எனக் கூறுகிறார். அவரிடம் சென்றால் மண்ணின் விளைவு நலம் பற்றிய பேச்சாற் காலம் கழிவதன்றி மண்ணக வாழ்வளித்த பெருமான் திருப்புகழ் பற்றிய பேச்சிலாமை கண்டு, “வாளா மனம் செல வைத்தது” என்று இயம்புகிறார். பயனிலாமல் வீண் பொழுது கழிந்தமை நினைந்து, பெரிதும் வருந்துவது விளங்க வடலூர் வள்ளல், “புண்ணுடையாரிற் புலம்புகின்றேன்” எனவும், இறைவன் திருவருளை நினைந்தும் பாடியும் நன்கு செலவிடுதற் குரிய காலத்தின் அருமை நோக்காமல் வீணே கழித்த பிழை கருதி, “பொறுத்தருள்” எனவும் வேண்டுகின்றார். ஒரு கால் பேராசிரியர் வெள்ளை வாரணரும் யானும் வடலூரிலிருந்து கண்ணாடியென்ற ஊர்க்குச் சென்று, மிராசுதார் ஒருவர் வீட்டில் விருந்துண்டிருந்த போது, பெரியவ ரொருவர், இராமலிங்க சுவாமிகளை எங்கள் தந்தையும், தீர்த்த நகரி மிராசுதார் ஒருவரும், குறிஞ்சிப்பாடி ரெட்டியார் ஒருவரும் வருவித்து, நெடு நேரம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம் என்று சொன்னார். இதுதான் சுவாமிகள் “மண்ணுடையார்” என்ற தொடரிற் குறிக்கப்படுகிறதென நினைக்கின்றேன்.
இதனாற் பெருநிலச் செல்வர்பாற் சென்று, காலத்தை வீணிற் கழித்த பிழை பொறுத்தருளுக என முறையிட்டவாறாம். (4)
|