2689. தாழாத துன்பச் சமுத்திரத் தேஇத் தனி அடியேன்
வீழாத வண்ணம் கருணைசெய் வாய்என்னை வேண்டிஅந்நாள்
ஊழாம் வினைதவிர்த் தாண்டனை யேஎன் உடையவனே
வாழா வகைஎனை இந்நாள் விடுத்தல் வழக்கலவே.
உரை: எளிய என்னை விரும்பி என்னுடைய இளம் பருவத்திலே எனக்குள் திருவடி ஞானமாகிய அன்பைத் தோற்றுவித்து, ஊழ்வினை என்னைத் தொடராதவாறு நீ ஆட்கொண்டாயாக, உலகியல் வாழ்க்கைத் துன்பமாகிய குன்றாத கடலின்கண் தளியவனான அடியேன் வீழ்ந்து கெடாமல் உய்யுமாறு, அருள் புரிவாயாக; அந்த அன்பு நெறியில் வாழாதபடி இந்நாளில் விட்டொழிவது, உனது திருவருட்குச் செயன் முறையாகாதே. எ.று.
உலக நடையில் ஈடுபட்டுச் செய்வன தவிர்வன தெரிந்து வாழ்வாங்கு வாழ்தற்கு ஏற்ற ஆற்றலும் அறிவும் பெறற்குரியது இளமைப் பருவம்; “இளமையிற் சிறந்த வளமையும் இல்லை; இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலும் இன்றே” (நற். 126) எனச் சான்றோர் கூறுவர். காமம் - அருள் மேலும் பொருள் மேலும் உளதாகும் ஆசை. இதனைத் திருவுளத்திற் கொண்டு இளமையிலேயே என்பால் அருள் கொண்டு எனக்குள் நின் திருவடிக் கன்பு தோற்றுவித்தாய்; இன்று செய்வினையினும் முன்பு செய்து ஊழ்த்து நிற்கும் ஊழ்வினை முறுகி, மிக்க வன்மை யுடையதாதலைக் கண்டு அதுதானும் உருத்து வந்து என்னை உலகியல் துன்பச் சூழலில் செலுத்தாவண்ணம் என்னை இளமையில் ஆண்டருளினாய் என விளம்புவாராய், “என்னை வேண்டி அந்நாள் ஊழ்வினை தவிர்த்து ஆண்டனை” என்று கூறுகிறார். தவிர்த்தல், நீக்குதல். ஊழ்வினை பெருவலி யுடையதாயினும், இறைவன் திருவருள் முன் ஒளி முன் இருள் போல நில்லாது என உயர்ந்தோர் உரைக்கின்றார். “எரியுறு நிற இறைவனதடி இரவொடு பகல் பரவுவர்தம், தெரியுறு வினை செறி கதிர் முனை இருள் கெட நனி நினை வெய்துமதே” (கழுமலம்) என்பது திருஞானசம்பந்தர் திருமுறை. தாழ்தல் - குன்றுதல். வினைப்பயனை வினை செய்தே நுகர வேண்டி யிருத்தலால் காணர காரியத் தொடர்ச்சியாய் வினைகள் பெருகித் துன்பங்கள் என்றும், வற்றாமல் இருப்பது பற்றி வாழ்க்கைத் துன்பத்தைத் “தாழாத துன்பச் சமுத்திரம்” என்று கூறுகிறார். “சம்சாரம் சாகரம் துக்கம்” என்பது வடநூல். திருவருள் துணையின்மை புலப்படுத்தற்குத் தம்மைத் “தனியடியே” னென்கின்றார். இளமையில் என்னை அன்பு நினைவு தந்து ஆட்கொண்டது இத் துன்பக் கடலில் வீழ்ந்து ஆழாமற் காத்தற் கன்றோ? இப்போதும் என்னை அவ்வாறு ஆண்டருள்க என வேண்டுவாராய், “துன்பச் சமுத்திரத்தே வீழாதவண்ணம் கருணை செய்வாய்” என்று பராவுகின்றார். அன்பு வாழ்வில் வாழ்க என அன்று ஆண்டு கொண்ட நீ இன்று கைவிடுவது நீதி முறையாகாது எனத் தெரிவிப்பாராய், “வாழா வகையெனை இந்நாள் விடுத்தல் வழக்கல்லவே” என வுரைக்கின்றார். வழக்கு - நீதி; செயல் முறையுமாம். வாழ்வெனச் சிறப்பிக்கப்படுவது திருவருட் செல்வ வாழ்வாதலால், அதனின் நீங்குவது வாழ்வாகாமை பற்றி “வாழா வகை” என எடுத்தோதுகின்றார். “வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே” (சதக) என மணிவாசகர் உரைப்பது காண்க. உலகுகளையும் உயிர்கள் வாழ்தற்கு வேண்டும் உடல் கருவி முதலியவற்றையும் படைத் தளித்தவனாதலால் “உடையவன்” என்றும், தம்மை ஆட்கொண்ட போது தம்முடைய உடல் பொருள் உயிரனைத்தையும் கொண்டு உடையனாயினமை பற்றி, “என் உடையவனே” எனவும் இயம்புகின்றார்.
இதனால், அன்பு நெறியின்கண் நிலைத்து வாழ்தலை விரும்பி விண்ணப்பிக்கின்றவாறாம். (5)
|