2690.

     ஊன்செய்த வெம்புலைக் கூட்டின் பொருட்டிங் குனைமறந்து
     நான்செய்த தீமையை நானே நினைக்க நடுங்குகின்றேன்
     ஏன்செய் தனைஎனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்
     வான்செய்த நாதநின் தண்ணருள் வண்ணம்என் வாழ்த்துவனே.

உரை:

      பெருமை பெற்ற தலைவனே, ஊனாலாகிய உடம்பின் பொருட்டு உன்னை மறந்து நான் செய்துள்ள குற்றங்களை நானே நினைந்து மனமும் உடம்பும் ஒக்க நடுங்குவேனாக, ஏன் இவற்றைச் செய்கின்றாய் என்று ஒரு சொல்லும் சொல்லாமல் மேன்மேலும் இரங்கி அருள் புரிகின்றாயாகலின், நினது தண்ணிய திருவருள் நலத்தை எவ்வகையில் எண்ணி வாழ்த்திப் போற்றுவேன்? ஒன்றும் தெரியவில்லை. எ.று.

     வான் - பெருமை. எத்தகைய பெருமைக்கு மெல்லையாயவனாதலால், சிவபெருமானை “வான் செய்த நாத” என் முன்னிலைப் படுத்துகின்றார். ஊனாலாகியது பற்றி, “ஊன் செய்த வுடம்பு” எனக் கூறுகிறார். உடம்பு உயிர் நின்று உணர்வன உணர்தற்கும், உஞற்றுவன உஞற்றுதற்கும் இடமும் கருவியுமாய் இன்றியமையாது போற்றிப் பேணப்படும் சிறப்புடையதாதலால், உடம்பின் பொருட்டு என்பவர், “வெம்புலைக் கூட்டின் பொருட்டு” எனப் புகல்கின்றார். இத்தகைய சிறப்புடையதாயினும், புலையரும் விரும்பாத புலால் நாறும் கூடாகக் காட்சியளிப்பது “பற்றி வெம்புலைக் கூடு” என விளம்புகிறார். உயிர் நிற்குங் காறும் ஒள்ளிய கருவியும் இடமுமாகும் இவ்வுடம்பு அவ்வுயிர் நீங்கியதும் வெவ்விய புலாற் கூடாகத் தன்மை மாறுதலால் இவ்வாறு வெறுப்புடன் கூறுகின்றாரெனக் கொள்ளல் வேண்டும். உடலைநோக்கிப் பேணும் போது மனம் அதனையருளிய பரம்பொருள் நினைவு எழாதபடி மறப்பித்தடலின், “உனை மறந்து” என்றும், யாதும் செய்யத் துணிதலின், “நான் செய்த தீமை நானே நினைக்க நடுங்குகின்றேன்” என்றும் கூறுகின்றார். தீமையின் கொடுமையைப் புலப்படுத்தற்கு “நானே நினைக்க நடுங்குகின்றேன்” என்கின்றார். பிறர் அறிந்து கேளாதபடி இத் தீமையைச் செய்வேனாயினும், நீ நன்கறிய நிகழ்வதால், நீயாயினும் ஏன் செய்தாய் என்று கேட்கலாம்; அதனைச் செய்வதன்றி மேன் மேலும் வெற்றி தருமுகத்தால் இரங்கி யருள் செய்கின்றாய் என்பாராய், “ஏன் செய்தனை யெனக் கேளாது மேலும் இரங்குகின்றாய்” என இயம்புகிறார். இரக்கம் - ஈன்டருளுதல் மேற்று. தீமை செய்வாரை ஒறுத்தல் முறையாக நீ நினது தண்ணிய பேரருளைச் செய்வது என்னறிவை மருட்டுவதால் எங்ஙனம் வியந்து வாழ்த்தி மகிழ்வேன் என்பாராய், “நின் தண்ணருள் வண்ணம் என் வாழ்த்துவனே” என வுரைக்கின்றார்.

     இதனால் சிவனது திருவருள் முறையை வியந்து பரவியவாறாம்.

     (6)