2691.

     ஆயாது நான்செயும் குற்றங் களைக்கண் டறியில்பெற்ற
     தாயாயி னும்பொறுப் பாளல ஆங்கவை சற்றலவே
     ஓயாது செய்யுந் தொறும்பொறுத் தாளும் உனைஎளியேன்
     வாயால் உரைக்கவும் மாட்டேன்அந் தோஎன்ன வன்மைஇதே.

உரை:

      பெருமானே, ஆராய்தலின்றி நான் செய்துள்ள குற்றங்களைக் கண்டறிவாளாயின், பெற்ற தாயும் பொறுக்க மாட்டாளாக, அவை ஒருபால் இருக்க, அப்பிழைகளையே ஓயாமல் நான் செய்யுந்தோறும் பொறுத் தருளுகின்ற உன்னை, எளியனாகிய யான் உன் திருப்பெயரை மனத்தால் நினைக்கவோ, வாயால் உரைக்கவோ செய்கிறேனில்லை; ஐயோ, என் மனவன்மையை என்னென்பது? எ.று.

     எதனைச் செய்யினும் இடம், காலம், கருவி பயன் ஆகியவற்றை ஆராய்ந்து செய்வது வினையாளர் இயல்பு; அதற்கு மாறாக வினை மேற்கொண்டு செய்வது பிழையாய் முடிவது இயற்கையாதலால், “ஆயாது நான் செயும் குற்றங்கள்” என்றும், எத்தகைய குற்றம் செய்யினும் அன்பாற் பொறுக்கும் தன்மையுடையவளான தாயும் என் குற்றங்களின் கொடுமையைக் காண்பாளாயின் வெறுத் தொதுக்குவா ளென்பார், “கண்டறியின் பெற்ற தாயாயினும் பொறுப்பாளலள்” என்றும் இயம்பி, அத்தகைய குற்றங்களில் நான் செய்தவை சில வல்ல, பல என்பார், “ஆங்கு அவை சற்றலவே” என்றும் கூறுகின்றார். சற்று - சி்ல என்னும் குறிப்பு மொழி. இன்ன பல குற்றங்களை ஓரொருகா லன்றி எப்போதும் இடையறவின்றிச் செய்கின்றேனாக, வெறுப்பு ஒரு சிறிதுமின்றி, வேண்டுமருளைச் செய்கின்றாய் என்பார், “ஓயாது செய்யுந் தோறும் பொறுத்தாளும் உன்னை” எனவும், உனது அருள் வன்மையைச் சிறிதும் உணராது, மனத்தால் நினைப்பதோ, வாயால் உரைப்பதோ செய்யாமல் இருக்கிறேன் என்றற்கு “எளியேன் வாயால் உரைக்கவும மாட்டேன்” எனவும் இசைக்கின்றார். மனம் நினையா விடினும் பழக்கத்தால் நாவுரைக்கும் என்பது தோன்ற “வாயால்” என வேண்டாது கூறுகிறார். “நற்றவா வுனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” (பாண்டிக்) எனச் சான்றோர் உரைப்பது காண்க. இதனை யறியிற் கற்போல் வலிய மனமுடையவரும் உருகி உரைப்ப தொழியாராக, என் மனம் கல்லினும் வலிது என்பாராய், “என்ன வன்மையிதே” என இசைக்கின்றார்.

      இதனால், தமது மனத்தின் நல்வலம் இல்லாமை கூறி வருந்தியவாறாம்.

     (7)