2692.

     ஒன்றுந் தெரிந்திட மாட்டாப் பருவத் துணர்வுதந்தாய்
     இன்றுந் தருதற் கிறைவா நின்உள்ளம் இயைதிகொலோ
     கன்றுங் கருத்தொடு மாழ்குகின் றேன்உன் கழல்அடிக்கே
     துன்றுங் கருத்தறி யேன்சிறி யேன்என் துணிவதுவே.

உரை:

      இறைவனே, நன்று தீது ஒன்றும் தெரிய மாட்டாத இளமைப் பருவத்தே எனக்கு நல்லுணர்வு தந்தருளினா யன்றோ; அதனை இப்பொழுது தருதற்குத் திருவுள்ளம் கொள்ள மாட்டாயோ; பலகாலும் எண்ணும் மனத்தோடு மயங்குகின்றேனாதலால், உன் திருவடியையே அடையும் நெறி அறிகிலேன்; உணர்வாற் சிறியனாகிய யான், கொண்டுள்ள துணிவும் இதுவேயாகும். எ.று.

      பொறி புலன்களின் வாயிலாக வளர்வது இந்திரியக் காட்சியும், மானதக் காட்சியுமாகலின் அவை வளராத பருவம் என்றற்கு, “ஒன்றும் தெரிந்திட மாட்டாப்பருவம்” என்றும், அக்காலத்தே மக்கட்குரிய பகுத்தறிவு நினைவுறாமை நோக்கித் தெரியாப் பருவமென்னாது “தெரியமாட்டாப் பருவம்” என்றும் விதந்து கூறுகின்றார். அந்நாளில் திருவருளுணர்வு எய்தப் பெற்றுச் சிவனடியே சிந்திக்கும் திரு அடையப் பெற்றமை புலப்பட, “உணர்வு தந்தாய்” என்று உரைக்கின்றார். அத்திரு மேலும் பெருகுதல் வேண்டுமாயின் அன்று தந்த திருவருள் ஞானம் மிக வேண்டுவது கொண்டு, “இன்றும் தருதற்கு நின்னுள்ளம் இயைதி கொல்லோ” என இயம்புகின்றார். உள்ளமும் ஒருவகையிற் கிளையாதலின் அதன் வினை முதன் மேனின்றது; அவன் கண்ணொந்தான் என்றாற் போல. கன்றுதல் - பலகாலும் பயிலுதல். பன்முறை நினைந்தமையின், “கன்றும் கருத்தொடு” எனவும், தெளி வெய்தாமை விளங்க, “மாழ்குகின்றேன்” எனவும் இசைக்கின்றார். இவ்வாறு திருவருளுணர்விற் சிறுமை யுடையேன் என்றற்குச் “சிறியேன்” என்றும் திருவடியே சிந்திக்கும் சிவஞானம் பெறும் திறம் இன்னும் அறிந்திலேன் என்பாராய், “கழலடிக்கே துன்றும் கருத்தறியேன்” என்றும், அதனைப் பெறுவதே உறுதியென்னும் எண்ண முடையேன் என்பார், வேறு துணிவது என்” என்றும் கூறுகின்றார்.

     இதனால், சிவனடி எய்தும் சிவஞானம் ஒன்றே பெறற்பால தெனத் தெரிவித்தவாறாம்

     (8)