2693. ஆவா எனஎனை ஆட்கொள வேண்டும் அடிமைகொண்ட
தேவா என் குற்றம் திருவுளத் தெண்ணில்என் செய்திடுவேன்
வாவா என அழைப் பார்பிறர் இல்லை மறந்தும்என்றன்
நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே.
உரை: என்னை யடிமை கொண்ட தேவதேவனே, ஆ ஆ எனச் சொல்லி என்னை ஆண்டருள வேண்டுகிறேன்; என் குற்றங்களைத் திருவுள்ளத்திற் கொண்டு மறுப்பாயேல் யான் யாது செய்குவேன்; என்னை இனிது நோக்கி வா வா என முகமனுரைத்து வரவேற்பவர் வேறு எவருமில்லை; யானும் பிற சிறு தெய்வங்களின் பெயரைத் தானும் மறந்தும் எனது மனத்தால் நினைக்கவும் நாவால் சொல்லவும் மாட்டேன். எ.று.
ஆ ஆ என்பது பரிவு தோற்றுவிக்கும் குறிப்பு மொழி; “ஆவா விருவர் அறியா அடி” (திருக்கோவை. 72) என வருதல் காண்க. நின் திருவருளுணர்வு பெற்றுத் திருவடி சேர்ந்தேனாதலின், என்னை யேற்றருள வேண்டும் என்பது மேற்கோள்; “என் குற்றம் திருவுளத்தெண்ணில் என் செய்திடுவேன்” என்பது எதிர்மறை வாய்பாட்டால் மேற் கோளை வற்புறுத்துவது. “வா வா என அழைப்பார் பிறர் இல்லை” என்பது ஏது; பிறர் என்றது பிற சிறு தெய்வங்களை, அழையாமைக்குக் காரணம் அவர் பெயர்களை மனத்தால் நினைத்தலும் நாவாற் சொல்லுதலும் இல்லாதவன் என்பாராய், “மறந்தும் என்றன் நாவால் உரைக்கவும் மாட்டேன் சிறுதெய்வ நாமங்களே” என்று கூறுகின்றார். நாவால் உரைக்கவும் மாட்டேனென்றவிடத்து உம்மை, மனத்தால் நினையாமையைச் சுட்டுகிறது.
இதனால், தம்மை யாட்கொள்ள வேண்டும் என்ற கருத்தைத் தருக்க நெறியில் வலியுறுத்தி வேண்டியவாறாம். (9)
|