2696.

     கேட்டிலாய் அடியேன்செய் முறையை அந்தோ
          கேடிலாக் குணத்தவர்பால் கிட்டு கின்றோய்
     ஏட்டில்ஆ யிரங்கோடி எனினும் சற்றும்
          எழுதமுடி யாக்குறைகொண் டிளைக்கின் றேன் நான்
     சேட்டியா விடினுமெனைச் சேட்டித் தீர்க்கும்
          சிறுமனத்தால் செற்பிழையைத் தேர்தி ஆயில்
     நாட்டிலார் காக்கவல்லார் என்னை யெந்தாய்
          நாள்கழியா வண்ணம்இனி நல்கல் வேண்டும்.

உரை:

      கெடாத குணங்களை யுடையாரிடத்தே செல்பவனே, அடியேன் செய்கின்ற முறையீட்டைக் கேளா தொழிகின்றாய்; ஆயிரங்கோடி ஏடுகள் உளவெனினும் எழுத வியலாத குறையினால் மனம் மெலிகின்றேன்; செயல் படாவிடினும் செயலுட் படுத்தி இழுக்கும் சிறுமைத் தன்மையையுடைய என் மனத்தால் செய்யப்படும் பிழைகளை அறிவாயாயின், இந்நாட்டில் என்னைக் காக்க வல்லவர் யாவர்? நாட்கள் கழியுமுன் எனக்கு நீ அருள் நல்க வேண்டுகிறேன். எ.று.

     முக்குண வயத்தராதலின், மக்களிற் குண மாறுபா டில்லாத பெருமக்களைக் “கேடிலாக் குணத்தவ” ரென்றும், அவர் நினைந்த பொழுதே நினைந்த வடிவில் தோன்றி நலம் புரியும் இயல்பினனாதலிற் சிவபெருமானை. “கேடிலாக் குணத்தவர்பாற் கிட்டுகின்றோய்” என்றும் புகழ்கின்றார். கிட்டுதல் - அடைதல். முறை - முறையிடுதல், அது முறையீடு எனவும் வழங்கும். எழுது கருவியாகிய ஏடுகள் மிகப்பல எளிதிற் கிடைப்பது விளங்க, “ஏட்டில் ஆயிரங் கோடி எனினும்” எனவும், உள்ள குறைகளின் மிகுதியை நோக்க, ஏடுகள் குறைபடும் என்றற்கு “எழுத முடியாக் குறை கொண்டு இளைக்கின்றேன்” எனவும் இயம்புகிறார். இளைத்தல் - மனம் சோர்தல். எச்செயலிலும் ஈடுபடா திருப்பினும் யாதானும் ஒன்றை யெண்ணிச் செயலிற் படுத்துவது மனத்தின் இயல்பாதலால், “சேட்டியா விடினும் எனைச் சேட்டித் தீர்க்கும் சிறு மனம்” என்று செப்புகின்றார். செயற் குற்றங்களாற் சிறுமை யுறுதல் பற்றி, “சிறுமனம்” எனக் கூறுகிறார். மனச் சிறுமையால் செய்வன பலவும் பிழையாய்த் துன்பம் விளைவித்தல் கொண்டு, “செய்பிழையைத் தேர்தியாயின்” என வுரைக்கின்றார். பிழை யுள்ளன பொறுக்கும் இயல்பினனாதலால் “தேர்தியாயின்” என்றும் தேர்ந்தறிந்து பொறுத்தல் செய்யாவிடில், என்னைக் காப்பவர் உலகத் தொருவரும் இல்லை என்பாராய், “நாட்டில் என்னை ஆர் காக்க வல்லார்” என்றும் எடுத்துரைக்கின்றார். காலம் தாழ்க்கின், நாட் கெட் டொழிவேனாதலால் இப்பொழுதே நின் திருவருளைச் செய்க என வேண்டுவாராய், “நாள், கழியா வண்ணம் இனி நல்கல் வேண்டு” மென இசைக்கின்றார். இனி - இப்பொழுது. நாள் - வாழ் நாள். கழிதல் - வீணாதல்.

     இதனால், என் குறைகள் பலவாயினும் பொறுத்தருளி, வாணாள் வெறிது கழியாதவாறு திருவருள் ஞானத்தை வழங்குக என முறையிட்டவாறாம்.

     (2)