2697. வேண்டாமை வேண்டுகின்றோர் நிற்க மற்றை
வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும்
தூண்டாத மணிவிளக்கே பொதுவி லாடும்
சுடர்க் கொழுந்தே என்னுயிர்க்குத் துணையே என்னை
ஆண்டாறு முன்றாண்டில் ஆண்டு கொண்ட
அருட்கடலே என்உள்ளத் தமர்ந்த தேவே
ஈண்டாவ எனச்சிறய அடியேன் உள்ளத்
தெண்ணம்அறிந் தருளாயேல் என்செய் கேனே.
உரை: வேண்டாமையை வேண்டுகிற ஞானிகள், ஒருபாலாக வாழ்க்கைக்கு வேண்டுவனவற்றை விரும்புகின்ற மக்கட்கு வேண்டியவற்றை நல்குகின்ற, தூண்டுதல் இல்லாத மணி விளக்காகத் திகழ்கின்ற பெருமானே, அம்பலத்தில் ஆடல் புரிகின்ற சுடர்க் கொழுந்தே, என் உயிர்க்குத் துணைவனே, என்னை என் பதினெட்டா மாண்டில் ஆண்டு கொண்ட அருட்கடலே, எனது உள்ளத்தில் எழுந்தருளுகிற தேவ தேவனே, இங்கு இவற்கு ஆவன எனச் சிறிய அடியவனாகிய, என்னுடைய தன்ம தெழும் எண்ணங்களை அறிந்தருள வேண்டும்; அருளாயேல் யான் யாது செய்வேன். எ.று.
“வேண்டாமை யன்ன விழுச் செல்வம்” (குறள்) இல்லையாகலின், மெய்யுணரந்து அவா வறுத்த ஞானவான்கள், அதனை விரும்புவராதலால் அவர்களை “வேண்டாமை வேண்டுகின்றோர்” எனவும், அவர் மிகவும் சிலராகலின் “நிற்க” எனவும் உரைக்கின்றார். “நோற்பார் சிலர் பலர் நோவாதவர்” (குறள்) என்று திருவள்ளுவர் கூறுவது காண்க. அவாவுக் கிரையாகி உலகில் வாழ்வாங்கு வாழும் நன்மக்கள் அதற்குரியவற்றை வேண்டுவதும், வேண்டுவார்க்குவேண்டுவன வழங்குவதும் திருவருளின் செயலாதலின், “வேண்டுவார் வேண்டுவன விரும்பி நல்கும் மணி விளக்கேஎன்று ஏத்துகின்றார்.” இயல்பாகவே ஒளி கொண்டு திகழும் மாணிக்க மணி போல நிறமும் ஞான வரு ளொளியு முடையனாதல் விளங்கத் “தூண்டாத மணி விளக்கே” என்று சொல்லுகிறார். தீச்சுடரின் நுண்ணிய நுனிக்கண் திகழும் ஒளி சுடர்க் கொழுந்தாகும்; அதன் ஒளியும் அழகும் சிவபரம் பொருளை நினைப்பித்தலால் “சுடர்க் கொழுந்தே” எனவும், திருச்சிற்றம்பலமாகி பொது விடத்தே தகளியில் நின் றெரியும் சுடர் போற் செம்மேனிப் பெருமானாய் நின்றாடுதலால், “பொதுவிலாடும் சுடர்க் கொழுந்தே” எனவும் சிறப்பிக்கின்றார். உயிரின்கண் ஒன்றாயும் உடனாயும் உணர்வு தந்தருளுவதுபற்றி, “என்னுயிர்க்குத் துணையே” என்று ஓதுகின்றார். இவ்வாறு சிவத்தை மனக் கண்ணிற் கண்டு மகிழ்கையில் தனக்கும் சிவனுக்கு மூண்டாய தொடர்பை நினைக்கும் வடலூர் வள்ளலார்க்கு அஃது உண்டாகிய காலம் நினைவில் எழுதலின், “என்னை ஆண்டாறு மூன்றாண்டில் ஆண்டு கொண்ட அருட்கடலே” என வுரைக்கின்றார். ஆண்டாறு மூன்றில் ஆட்கொண்ட பரம்பொருள் இன்றும் எழுந்தருளுமிடம் தமது உள்ளம் என்பது தோன்ற “என் உள்ளத்தமர்ந்த தேவே” என்று கூறுகின்றார். தாம் உள்ளத்திலேயுடைய திருவடியின் பெருமையை நோக்கத் தமது சிறுமை விளங்கக் கண்டு “சிறிய அடியேன்” எனவும், சிறுமைக்குத் தகுவன எண்ணுதலால், அவை முட்டின்றிக் கைகூடுமாறு திருவருள் செய்க என வேண்டுவாராய், “அடியேன் உள்ளத்து எண்ணும் ஆவ என அறிந்து” அருளுக எனவும், அருளாவிடில் நின் திருவுள்ளம் அது வெனக் கொண்டு அமைவதன்றி வேறே என்னாற் செய்யலாவ தொன்றும் இல்லை என்பாராய், “என் செய்கேனே” எனவும் இயம்புகின்றார்.
இதனால் மூவாறாண்டில் ஆண்டருளிய நீ சிறிய அடியவனாகிய எனக்கு ஆவன அறிந்து அருளுக என வேண்டியவாறாம். (3)
|