2698.

     என்னைஅறி யாப்பருவத் தாண்டு கொண்ட
          என்குருவே எனக்குரிய இன்ப மேஎன்
     தன்னைஇன்று விடத்துணிந்தாய் போலும் அந்தோ
          தகுமோநின் பெருங்கருணைத் தகவுக் கெந்தாய்
     உன்னைஅலா தொருவர்தம்பால் செல்லேன்என்னை
          உடையானே என்னுள்ளத் துள்ளே நின்று
     முன்னைவினைப் பயன்ஊட்ட நினைப்பிக் கின்றாய்
          முடிப்பிக்கத் துணிந்திலையேல் மொழிவ தொன்னே.

உரை:

      எனது ஆன்ம வியல்பை, யான் அறியாத காலத்தே போந்து அருளுணர்வு தந்து ஆண்டு கொண்ட என் குருபரனே, எனக்கே யுரிய அறிவின்பப் பொருளே, இன்று என்னைக் கைவிட எண்ணினாய் போலும்; ஐயோ, பெருங் கருணை யுருவாகிய நினக்கு இது தகுதியாகாதே; எந்தையே, உன்னையன்றி வேறு ஒருவர் பக்கமும் செல்லுவதில்லேன்; என்னையுடையவன் நீயே; என் மனத்தின்கண் என்னுடைய முன்னை வினை தனது பயனை நுகர்வித்தற் கேற்ப நினைவன நினைக்கச் செய்கின்றாய்; நினைவை யெழுப்புகின்ற நீ அதனை முடித்தற்கு நினைந்தருளுகின்றாயில்லை; இதற்கு என்ன சொல்லுவது. எ.று.

     ஒவ்வொருவரும் தனது ஆன்மா உண்மை யுணரும் சித்துப்பொருள் என்பதை யுணர்வது முதற் கடனாகும்; “தன்னையறிவது அறிவு பின்னை யறிவது பேயறி வாமே” (திருமந்) என்று பெரியோர் கூறுவர்; அதனை யறியாக் காலத்தே என்னுட் போந்து “நீ, உள்ளதன் உண்மையை உள்ளவாறறியும் அறிவுப் பொருள். உன்னையறிந்தால் என்னையும் அறிவாய்” என ஞான மருளியதை நினைந்து, “என்னை யறியாப் பருவத்தாண்டு கொண்ட என் குருவே” என வுரைக்கின்றார். “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்” எனச் சிவஞான போதம் தெரிவிப்பதும், “தன்னாலே தன்னையறிந்தால் தன்னையும் தானே காணும்” எனச் சிவப்பிரகாச முரைப்பதும் அறிக. தூய இன்பப் பேற்றுக்கே ஆன்மா உரிய தென்பதைத் தொல்காப்பிய முதலிய தொன்னூல்கள் உரைத்தலால், “எனக்குரிய இன்பமே” என்று கூறுகிறார் “எல்லா வுயிர்க்கும் இன்பமென்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்பர் தொல்காப்பியர். அதனையறியாது கிடக்கும் உயிர்க்கு நுகர்தற் பாலது இன்பம். நீக்கற் பாலது துன்பம் என உயிர்க்குயிராய் நின்று உணர்த்துவது திருவருள்; துன்ப மெய்துமாயின் திருவருளுணர்த்தாமை காரணமெனக் கொண்டு, “என்றன்னை இன்று விடத் துணிந்தாய் போலும்” எனவுரைத்து “அந்தோ” என இரங்குகின்றார். தந்த தெய்வம் தரும் என்பதற்கு மாறாக ஆண்டருளிய நீ ஆளாது விடுதல் முறையன்றோ என்பாராய், “தகுமோ நின் பெருங்கருணைக்கு” என்றும், இதனைச் சொல்ல வேண்டிய நிலைமைக்கு வருந்தி, “எந்தாய்” என்றும் சொல்லுகின்றார். கருணையே யுருவாயவன் சிவபெருமானாதல் பற்றி “பெருங்கருணைத் தகவு” எனக் குறிக்கின்றார். “என்னை நாடிய நீ பிறரையும் நாடுகின்றாய்; அவர்பாலே செல்லுக” என்னும் உலகநடை பற்றிக் கைவிடுகின்றாய் போலும் எனவுரைப்பாராய், “உன்னையல்லாது ஒருவர்பாற் செல்லேன்” எனவும், என்னையுடையவன் நீயாதலால் என்று ஏதுக் காட்டற்கு “என்னை யுடையானே” எனவும் இயம்புகிறார். “தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்” (வாழாப்) எனத் திருவாசகம் உரைப்பது காண்க. செய்வினை யசத்தாதலின், செய்பவனை அது தானே சென்று அடையமாட்டாமையின், அதனை அடைவிப்பவன் முதல்வன் என்பதனால், “என்னுள்ளத் துள்ளே நின்று முன்னை வினைப்பயன் ஊட்ட நினைப்பிக்கின்றாய்” என்று கூறுகின்றார். “அவ்வினையைப் பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல், ஆர் தாம் அறிந்தணைப்பார் அங்கு” (சிவ. போ.) என்பது அறிவு நூல். வினைப் பயனை ஊட்டற்கு நினைப்பித்த நீ, அதனை யுண்டு கழித்தற்கு உதவாது ஒதுங்கி நீங்குதல் கூடா தென்பார், “முடிப்பிக்கத் துணிந்திலையேல்” என்றும், வேறு கூறுதற் கின்மையின், “மொழிவது என்னே” என்றும் மொழிகின்றார். “வினையாயின தீர்த்து அருளே புரியும் விகிர்தன்” (ஈங்கோய்) என இறைவன் இயல்பை ஞானசம்பந்தர் உரைப்பதறிக.

      இதனால், இறைவன் ஆன்மாக்களை அடிமை கொண்டு ஆளும் திறம் கூறியவாறாம்.

     (4)