2699. என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ
இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய்
நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன்
நீஇதனை அருந்திலையோ நினைப்பிக் கின்ற
மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண்
மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும்
உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என்
உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே.
உரை: நினைவன நினைப்பிக்கின்ற வேந்தனே, எனது அரியவுயிர்க்கு வாழ்வளிப்பவனே, என் கண்மணியே, எனக்குக் குருவே, பிறவி நோய்க்கு மருந்தே, ஐயோ, நாணம் மிகப் பொருந்திய எனது தன்மையை அறிந்திருந்தும், என்னை இவ்வாறு செய்யத் துணிந்துவிட்டாய்; இதனை என்னென்பது? எந்தையே, நின் மேல் ஆணையாகச் சொல்லுகிறேன். எனக்கு உன்னைத் தவிர வேறு யாதும் வேண்டா; இதனை நீ அறிய விலைலயா? யாவரையும் நினைப்பிக்கும் பெருமான் நீ; இப்பொழுதும் யான் உன்னால்தான் இவ்வுலகில் எனது உயிரைத்தாங்கிக் கொண்டு வாழ்கின்றேன்; என் மனநினை வறிந்து உன் திருவருளைத் தந்து உதவுவாயா? என்னால் சிறிதும் முன்னுறவுணர முடியவில்லையே. எ.று.
முந்துற்றுக் காண்பதற்கும் மொழிதற்கும் உள்ளம் சுருங்குவது நாணம் என்னும் பண்பு. இதனைச் சான்றாண்மையைத் தாங்கும் தூண் என்பர் திருவள்ளுவர். தகாதவற்றை நினைத்தற்கும் செய்தற்கும் மொழிவதற்கும் ஒருப்படாதபடி உள்ளத்தை ஒடுக்குவது இந்நாணத்தின் செயற் பண்பாகும். இதனை மிகக் கொண்ட எளியனாகிய என்னை நாண்வேலிக் குள்ளிருந்தே நினதருளைப் பெறாதவாறு செய்கின்றாயே என்பாராய், “என் நாணை யறிந்தும் என்னை அந்தோ அந்தோ இவ்வகை செய்திடத் துணிந்தாய்” எனக் கூறுகின்றார். தமது உள்ளத்தே கொண்டிருக்கும் அடிமைப் பணி வேட்கை வெளிப்படப் பாடல்களை ஆக்கியும் பாடியும் எழுதியும் வேண்டுமாறு செய்து விட்டாய் என்பது குறிப்பு. நின் மேல் ஆணையாகச் சொல்லுகின்றேன் என்பது உலகவர் வற்புறுத்தற்கு வழங்கும் வழக்கு மொழி; அதனால் “நினை ஆணை” என்கின்றார். ஆணை யென்றால் மறுக்கவோ புறக்கணிக்கவோ கூடாது என்பர். “அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே” (கோளறு) என ஞானசம்பந்தர் வழங்குவது காண்க. இதனை அவர் முதன் முதலாக எடுத்தாண்டது கொண்டே நம்பியாண்டார் நம்பிகள், “திருவடியை அத்திக்கும் பத்தரெதிர் ஆணை நமதென்ன வலான்” (ஆளு. தொகை) என்று புகழ்கின்றார். யான் வேண்டத் தக்கதும் வேண்டுவதும் நீயே என்பார், “நின்னை யலாது ஒன்றும் வேண்டேன்” என்றும், என் உள்ளத்தமர்ந்த தேவராதலால் நீ அறிந்திருக்க வேண்டுமே என வினவுவாராய், “நீ இதனை அறிந்திலையோ” என்றும், என்னை இவ்வாறு நினைக்கப் பண்ணுபவனும் நீ தானே என்பார், “நினைப்பிக்கின்ற மன்னா” என்றும் ஓதுகின்றார். உயிர்களை உலகில் வாழச் செய்பவனாதலால், “என்னாருயிர்க்கு வாழ்வே” என்றும், கண்ணிற் கருமணி போன்று வாழும் உயிர்க்குள் உணர்வொளியாய்த் திகழ்வது பற்றி, “என்
கண்மணியே” என்றும், மயங்குமிடத்துச் சிந்தைக்குள் தெளிவு நல்குதலின், “என் குருவே” என்றும், நோயுற்ற பொழுது பொறுக்கும் ஆற்றலை நல்கித் தன்னை நினைப்பித்தலின், “மருந்தே” என்றும் இசைக்கின்றார். நீ வாழ்விப்பதால் நான் வாழ்கின்றேன் என்ற கருத்தால், “இன்னும் உன்னால் இங்கு உயிர் தரித்து வாழ்கின்றேன்” எனவும், இத்தகைய எனது விழைவை நிறைவு செய்க என வேண்டலுற்று. “உள்ள மறிந்து உதவுதியோ உணர்கிலேனே” எனவும், உரைக்கின்றார்.
இதனால், அடிமைத் திறத்தில் தமக்குள்ள ஆர்வத்தை வடலூர் வள்ளல் தெளியப் புலப்படுத்தியவாறாம். (5)
|