2700.

     உள்ளமறிந் துதவுவன்நம் உடையான் எல்லாம்
          உடையான்மற் றொருகுறைஇங் குண்டோ என்னக்
     கள்ளமனத் தேன்அந்தோ களித்தி ருந்தேன்
          கைவிடுவார் போல்இருந்தாய் கருணைக் குன்றே
     எள்ளல்உறப் படுவேன்இங் கேதுசெய்வேன்
          எங்கெழுகேன் யார்க்குரைப்பேன் இன்னும் உன்றன்
     வள்ளல் அருள் திறநோக்கி நிற்கின் றேன்என்
          மனத்துயர் போம் வகைஅருள மதித்து டாயே.

உரை:

      கருணையே குன்றுருக் கொண்டாற் போல்பவனே, அன்பர் மனமறிந்து நம்மை யுடையவனாதலின் திருவருளை யுதவுவான்; அவன் எல்லாம் உடையானாதலால் நமக்கு ஒரு குறையும் உண்டாகாது என்று கள்ளம் பொருந்திய என் மனத்திற் கொண்டு மகிழ்வு கொண்டேன்; ஐயோ, கைவிடுபவர் போற் இருந்தருளுகின்றாய்; இதனால் யான் உலகவரால் இகழப்படுவேன்; அதைத் தவிர்க்க யான் யாது செய்ய வல்லேன்; எவ்விடம் போவேன்; யாவர்க்கு எடுத்துச் சொல்வேன்; இப்பொழுதும் உனது அருட் கூற்றையே எதிர்பார்த்துள்ளேன்; என் மனத்துள்ள துயரம் நீங்குமாறு அருள் புரியும் வகையை நினைந்தருள்க. எ.று.

      உருவில்லாத கருணைக்கு உருக் கொடுப்பார் போல் “கருணைக்குன்றே” எனச் சிவபெருமானை உருவகம் செய்கின்றார். நம்மை ஆளாக வுடையவனாதலின், நம்முடைய கருத்தறிந்து வேண்டுவன உதவுவதில் தவறான் என்று நினைத்திருந்தேன் என்பாராய், “உள்ளம் அறிந்து உதவுவன் நம்முடையான்” என்றும், அப்பெருமான் எல்லா வுலகுகளையும் தனக்கு உடைமையாகக் கொண்டவனாதலால் நமக்குக் குறை யொன்றும் உண்டாகாதவாறு அளித் தருளுவான் என எண்ணி இறுமாந்திருந்தமை விளங்க, “எல்லாம் உடையான் மற்றொரு குறை இங்கு உண்டோ என்னக் களித்திருந்தேன்” என்றும் இசைக்கின்றார். உள்ளக் களிப்புப் புறத்தே வெளிப்பட வில்லையே யெனின், கள்ளம் நிறைந்தது என மனமாதலின் உவகை மெய்ப்பட வில்லை என்றற்குக் “கள்ள மனத்தேன்” எனக் கூறுகின்றார். தலைவனாகிய சிவபெருமானுடைய குறிப்பறிந்து கொள்ள வேண்டாவோ என்னில், உவகை மிகுதியால் களிப்பு மிகுந்து ஓரேனாயினேன் என வருந்துவாராய், “அந்தோ களித்திருந்தேன்” என்றும், திருவருளின்ப வுதவி எய்தாமை நோக்கி, “கை விடுவார் போல் இருந்தாய்” என்றும், இஃது அருளர்க்குப் பொருந்துவ தன்று என்றற்குக் “கருணைக் குன்றே” என்று இயம்புகின்றார். இருக்கின்றாய் எனற்பாலது வன்புறையில் இறந்த காலத்தில் வந்தது. அருளாவிடில் வரும் ஏதப்பாடு கூறலுறுவார். உலகவர் என்னை எள்ளி இகழ்வர் என்றற்கு “எள்ளலுறப்படுவேன்” என்கிறார். வேறு பிறரை நாடலா மெனின், சிவனோடு ஒப்பாரும் மிக்காரும் யாண்டும் இலரே என்பாராய், “எங்கெழுகேன் யார்க்குரைப்பேன்” எனவும், வேறு செயலின்றிக் கையறவு படுவது தோன்ற, “இங்கு ஏது செய்வேன்” எனவும் வாய் வெருவுகிறார். இவ்வாற்றால் நின் திருவருளை எதிர் நோக்கும் ஆர்வம் தவிர்ந்திலேன் என்பாராய், “இன்னும் உன்றன் வள்ளலரும் திறம் நோக்கி நிற்கின்றேன் என்றும், அருளை நோக்கற்கு ஏதுவாகிய மனக்கவலை நீங்கும் திறம் ஒன்றைத் திருவுள்ளத்திற் கொண்டு அருள் புரிக என வேண்டுவாராய், “என் மனத்துயர் போம் வகை அருள மதித்திடாயே” என்றும் உரைக்கின்றார். வள்ளலருள் - வன்மையான திருவருள். மதித்தல் - நினைத்தல்.

     இதனால், அடிமையாகிய மனக்கவலையை மாற்றற் பொருட்டு அருள் நினைவு கொள்க என வேண்டியவாறாம்.

     (6)